மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக கடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்காற்றிய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது அவரது முதல் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த அரைஇறுதி ஆட்டத்திலும் வருண் சக்ரவர்த்தி இந்தியாவின் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “வருண் சக்கரவர்த்தியிடன் 2 ஆச்சரியமான பகுதிகள் இருக்கின்றன. ஒன்று சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அதிகமாக விளையாடவில்லை. அதனால் அவரைப் பற்றி எதிரணிக்கு தெரிவதில்லை. அவருடைய கைகளின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் அவருடைய கைகளைப் பார்ப்பதில்லை. மாறாக பந்தை அவர் தரையில் பிட்ச் செய்த பின் அடிக்க முயற்சிக்கிறார்கள்.
அது மிகவும் கடினமானது. அந்த விஷயத்தில்தான் நியூசிலாந்து தவறு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் கைப்பற்றி வந்த வருண் முழு தன்னம்பிக்கையை கொண்டுள்ளார். இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றும் அவர் அதை அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியிலும் செய்வார் என்று நம்புகிறேன்.
துபாயில் நமது பின்னர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்த்தோம். எனவே ஆஸ்திரேலியா அல்லது இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது மீண்டும் நியூசிலாந்து வந்தாலும் இதே அணி தொடர வேண்டும். நம்முடைய 4 ஸ்பின்னர்கள் வெற்றிக்கான சாவியாக இருப்பார்கள். எனவே இந்தியா சரியான தேர்வை செய்துள்ளது” என்று கூறினார்.