சிட்னி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமீப காலமாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கடும் சவால் அளித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் ஆகிய தொடர்களில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா இம்முறையும் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்ல விடாது என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய அணி மீது அதிகப்படியான அழுத்தம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்தியா தங்களது அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடி தனித்துவமான நிலையில் இருக்கிறது. துபாய் பிட்ச் காய்ந்திருக்கும் நிலையில் ஸ்கொயர் பகுதிகளில் புற்கள் இல்லை. அது இந்தியாவுக்கு பொருந்தும். ஆனாலும் அவர்கள் மீது அனைத்து அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தங்களுக்குத் தாங்களே பெருமையுடன் விளையாடி அரைஇறுதிக்கு வந்துள்ளார்கள்.
இது அவர்களுக்கு மற்றும் ஒரு சாதாரண போட்டி. எனவே ஆஸ்திரேலியர்கள் மீது எந்த அழுத்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தியா அழுத்தத்தை தங்களது சொந்த வழியில் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தோற்கடித்தால் அது அப்செட்டாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சூழ்நிலைகளில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடிப்பதை நான் பார்ப்பேன்.
உண்மையில் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் இந்தியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கிறது. ஏனெனில் அவர் வந்ததிலிருந்து கடந்த 6 மாதங்களில் அவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. எனவே இத்தொடரில் எப்படியாவது இறுதிப்போட்டி செல்ல வேண்டும் என்று அழுத்தம் அவர்கள் மீது இருக்கிறது. ஆனால் அவர்கள் இறுதிப்போட்டி செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. தோல்வியை சந்தித்த பின் அவர்களிடம் பெரிய ரியாக்சன் இருக்கலாம்” என்று கூறினார்.