சாம்பியன்ஸ் டிராபி: டிராவிஸ் ஹெட்டை விரைவில் அவுட்டாக்க இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

சென்னை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறார். குறிப்பாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகியவற்றில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அவரை விரைவில் அவுட்டாக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை அவுட்டாக்க இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “புதிய பந்தை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக ஓவர் தி ஸ்டம்ப் பகுதியிலிருந்து பந்து வீசச்சொல்லுங்கள். ஹெட் தனது 3 ஸ்டம்புகளையும் காண்பித்து காலை நகர்த்தி மேலே தூக்கி அடிப்பார். எனவே புதிய பந்தில் வருண் சக்கரவர்த்தி இந்தியாவுக்கு அவரை சாய்க்கும் வாய்ப்பைக் கொடுக்கலாம். வருணுக்கு எதிராக ஹெட் பின்னங்காலை வைக்க முயற்சித்தால் அதைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். அதிரடியாக விளையாட விரும்பும் அவர் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர். அதனால் ஒன்று அவர் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கக்கூடும் அல்லது இந்தியாவுக்கு எதிராக சீக்கிரமாக அவுட்டாகக் கூடும்.

ஒருவேளை ஹெட் அவரை அடித்து நொறுக்க முயற்சிக்காவிட்டால் வருணுக்கு 5 தொடர்ச்சியான ஓவர்களை கொடுங்கள். ஆஸ்திரேலிய அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அதை சமாளிக்க நம்மிடம் ஜடேஜா, அக்சர் படேல் உள்ளார்கள். எனவே டாஸ் வென்றால் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய வையுங்கள். டிராவிஸ் ஹெட் விக்கெட் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டால் போட்டி இந்தியாவின் கட்டுக்குள் வந்து விடும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.