புதுடெல்லி: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல்ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘மனுதாரரான சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த பாலியல் புகார் அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக புகார் அளித்த அந்த நடிகையே 3 முறை வழக்கை திரும்பப்பெற்றுள்ளார். விஜயலட்சுமியுடன் பழக்கம் இருந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவரே கடிதமும் கொடுத்துள்ளார். தற்போது சீமானை துன்புறுத்தும் நோக்கில் பழைய புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சீமானின் அரசியல் பொதுவாழ்வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இதனால் புகார் அளித்த அந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார் தானே. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா?’’ என்றனர்.
அதற்கு சீமான் தரப்பில், ‘‘விஜயலட்சுமியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்ததோடு, இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர். பின்னர், விசாரணையை மே மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.