செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை – மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை,

1994 ம் ஆண்டு நடந்த பங்குப் பட்டியல் மோசடியில், இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் மாதபி பூரி புச், அதன் தற்போதைய முழுநேர இயக்குநர்கள் மூன்று பேர் மற்றும் இரண்டு பி.எஸ்.இ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பணியகத்திற்கு (ACB) மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாகிறது என்பதால், மாதபி பூரி புச் மற்றும் 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ACB) எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஊழல் தடுப்புசிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

முன்னதாக செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் செபி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவஸ்தவா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் ஒழுங்கு முறை விதிகள் மீறல், கூட்டு சதி நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பாக நேர்மையான பாரபட்சமற்ற விசாரணை தேவை. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், முன்னாள் மும்பை பங்கு சந்தையின் தலைவர் பிரமோத் அகர்வால், மும்பை பங்கு சந்தையின் தலைமை நிர்வாக இயங்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி மற்றும் செபியின் முழு நேர உறுப்பினர்கள் அஸ்வினி பாட்டியா, ஆனந்த் நாராயணன், கம்லேஷ் சந்திர வர்ஷினி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கும் என்றும் 30 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இந்நிலையில் பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு நேற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஐகோர்ட்டு அதனை நிறுத்தி வைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.