சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் அமைப்பு இடையேயான கூட்டாண்மையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாக்ஸ்டெமி அமைப்பின் தலைவரும், கல்விசார் உளவியலாளருமான மருத்துவர் எஸ்.சரண்யா டி.ஜெயக்குமார், மருத்துவ மையத்தில் உதடு, அண்ணப்பிளவு முகத்தாடை சீரமைப்புக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மையம் வாயிலாக உதடு, அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வாலிப வயது வரை தேவைப்படும் முகத்தாடை சீரமைப்பு மற்றும் பேச்சுப் பயிற்சி வரை தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக 100 குழந்தைகள் நேற்று இணைந்தனர். முன்னதாக டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.யுடன் இணைந்து உதடு, அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்ட 700 குழந்தைகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்துள்ளது.
நிகழ்ச்சியில் மருத்துவர் சரண்யா பேசுகையில், “நானும் உதடு அண்ணப்பிளவோடு தான் பிறந்தேன். வசதி குறைவு காரணமாகவும், அப்போது நவீன சிகிச்சைகள் இல்லாத நிலையினாலும் 15 வயதில்தான் எனக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் மருத்துவர்களின் கவனிப்பால் முழு திறன்களையும் பெற்றேன். எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ சிகிச்சையை நம்பி முழு மனதோடு ஒத்துழைத்தால் பிற குழந்தைகளைப் போல பேசி கல்வி பயின்று, உயர் நிலையை அடைய முடியும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பாலாஜி பல் மற்றும் முகத்தாடை சீரமைப்பு மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.எம்.பாலாஜி, மைசூரு, பேச்சு மற்றும் கேட்பியலுக்கான அனைத்திந்திய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எம்.புஷ்பாவதி, பரிதாபாத்தில் உள்ள மாணவ் ரச்னா பன்னாட்டு கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர் புனித் பத்ரா உள்ளிட்டோரை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை. துணை வேந்தர் உமா சேகர் கவுரவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவத் துறை தலைவர் எச்.தமிழ்செல்வன், பேச்சு மற்றும் கேட்பியல் துறை தலைவர் பிரகாஷ் பூமிநாதன், டிரான்ஸ்பார்ம் கிளெஃப்ட் அமைப்பின் செயல் இயக்குநர் ஹியு ப்ருஸ்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.