‘மகளிர் உரிமைத் தொகையால் ஓய்வூதியத்தை மறுக்கக் கூடாது’ – ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

கோவை: “மகளிர் உரிமைத் தொகை பெறுவதால் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கக் கூடாது” என ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிட்டு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடந்த தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியம், சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்து ரூ.3,000 ஓய்வூதியம் மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறுவதை காரணமாக கூறி ஓய்வூதியம் மறுக்க கூடாது. நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் ரூ.5 லட்சம் மானியமாக வழங்க வேண்டும். இடம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகியவற்றுக்கு பணப்பலன்கள் வழங்குவது போல் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் வழங்க வேண்டும். தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நலவாரியத்தில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிற்சங்கம் பதிவு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் நலவாரிய பதிவுக்காக சான்றொப்பம் இட வேண்டும் என்ற நடைமுறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.