மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்க கூடாது: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகக் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை அறிவிப்பை கடந்த பிப்.11-ம் தேதி தொடங்கியுள்ளது. அந்த அறிவிப்பில் காவிரிப் படுகையில் 9990.96 சதுர கி.மீ. பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்துக்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகிலும் உள்ளது.

மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர்க்கோளக் காப்பகமாக மத்திய அரசால் கடந்த 1989 பிப்.18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த உயிர்க்கோளக் காப்பகம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப் பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. அத்துடன், இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது.

தமிழக அரசு கடந்த 2021 செப்டம்பரில், பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு இனத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்துள்ளது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதியில் 448 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பது, இந்தப் பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைக்கக்கூடும் .

வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். இதனால், இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு கருத்து எதுவும் கேட்காதது துரதிர்ஷ்டவசமானது. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தமிழக அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.

எனவே, மத்திய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் ஓஏஎல்பி-யிலிருந்து நீக்க வேண்டும்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதுகாக்கப்பட்ட இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, இந்த முக்கியமான பிரச்சினையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.