இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டம்தான் காரணம். போராட்டம் வெடித்த பிறகே பிரதமர் பதவியை, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தாய்லாந்தில் வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த முறையில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதும் மிகச்சிறந்த வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை
எங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமானவை. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மிகவும் சார்ந்து இருக்கிறோம். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், எங்களை தனிமைப்படுத்த முடியாது. இருப்பினும், 2 நாடுகளிடையே சில மோதல்கள் எழுந்துள்ளன. தவறான பிரச்சாரம் காரணமாக இந்த மோதல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, எங்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் எழுந்துள்ளது. அந்த தவறான புரிதலை நாங்கள் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய கட்சி தொடக்கம்: இதற்கிடையே, வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான மாணவர் போராட்டத்தின்போது நடந்த பிரச்சாரங்களில் பங்கேற்றவர்கள் சேர்ந்து தேசிய குடிமக்கள் கட்சி என்னும் புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அமைப்பின் தலைவரான நஹித் இஸ்லாம் தலைமையில் இக்கட்சி உருவாகியுள்ளது. இந்த புதிய கட்சிக்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று வங்கதேச இடைக்கால அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, வரும் டிசம்பரில் வங்கதேச நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இடைக்கால அரசு செய்து வருகிறது. இதற்கிடையே, தற்போது மாணவர்கள் சார்பில் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு, இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளித்துள்ளதால், தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.