சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே, இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடத்தப்படுவதால் இந்திய அணிக்கு அது சாதகமாக இருப்பதாக பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலரும் கூறிவருகின்றனர்.

மேலும், ஒரே மைதானத்தில் நடத்தப்படுவதால் அவர்கள் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை, மைதானத்தின் தன்மையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என அதற்கு காரணங்கள் அடுக்குகின்றனர். இந்த நிலையில், அத்தகைய விமர்சனங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்திருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஒவ்வொரு முறையும் மைதானம் உங்களுக்கு வெவ்வேறு சவால்களைத் தருகிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும் மைதானம் வித்தியாசமாக இருந்தது. மேலும், இது எங்கள் சொந்த மைதானம், இது துபாய். நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடியதில்லை. எங்களுக்கும் இது புதிதுதான். இந்த மைதானத்தில் நான்கைந்து மேற்பரப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அரையிறுதியில் எந்த மேற்பரப்பு இருக்கும் என்று தெரியவில்லை.

நியூசிலாந்து பவுலர்கள் பந்துவீசும்போது பந்து ஸ்விங் ஆவதைப் பார்த்தோம். எங்களின் முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதைப் பார்க்கவில்லை. மைதானத்தின் ஒவ்வொரு மேற்பரப்பிலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த ஆடுகளத்தில் என்ன நடக்கும், என்ன நடக்காது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், எதுவாக இருந்தாலும் அதற்கு தகவமைத்துக்கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.” என்று தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
