படிப்பில் கோட்டைவிட்ட எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தன் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். விமானத்துறையில் இன்டர்ன் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வேலையை நிரந்தரமாக்கி வாழ்வில் முன்னேறிவிட முடிவெடுக்கிறார். அப்போது, அவன் தந்தையின் ஆசைக்காக அந்த வேலையைக் கைவிட்டு நடிப்புப் பயிற்சிக்காக கல்லூரியில் சேர்கிறார். ஒல்லியான தேகம், நீண்ட மூக்கு, பெரிய நெற்றி என தன் மீதான தாழ்வுணர்ச்சி அவருக்கு அதிகமிருந்தது. நடிகன் என்பவன் திடகாத்திரமான உடல், பொலிவான முகம் கொண்டிருக்கவேண்டுமென அப்போது திரைத்துறையில், ஏற்படுத்தி வைத்திருந்த கற்பிதங்கள் எதற்குள்ளும் அந்த இளைஞன் பொருந்தவில்லை.

இதன் காரணமாக நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராகச் செல்கிறார். மீண்டும் அவரின் தந்தை அவரைக் கடுமையாகத் திட்டி, நடிக்கச் சொல்கிறார். நண்பர் ஒருவரின் பரிந்துரையால் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தாமதமாக வந்து சேர்ந்த இரயிலில் ஏறி படப்பிடிப்புக்கு ஓடுகிறார். தாமதமானதற்குத் திட்டு வாங்கி நடிக்கிறார். அதன் பிறகு நடிப்பு எனும் கலை அந்த இளைஞனை ஆட்கொள்கிறது. பலமுறை வேண்டாமென தவிர்த்துவிட்டுச் சென்ற நடிப்பு அவரின் தனிப்பெரும் அடையாளமானது. செங்கல்பட்டில் நகைகளை பாலீஷ் செய்யும் ஏழைத் தந்தை மெகபூப் பாஷாவின் கனவு வென்றது. அவரின் மகன் நாசர் இன்று இந்திய சினிமாவின் மதிப்பிற்குரிய நடிப்பு முகம்.
சினிமா இயக்குநர்களின் மீடியம். ஆனால், இந்திய சினிமா முழுக்கவே நாயக சினிமாதான். அதை சரியாக்கும் முயற்சிகள் நடந்தாலும், `இந்த நடிகரின் படமென’ நாயகர்களைக் குறிப்பிட்டே படத்தை அழைப்பதுதான் நம் வழக்கம். படத்தின் கதையும், திரைக்கதையும் நாயகனைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கும். ஹீரோ தவிர பல படங்களில் ஹீரோயினுமே கூட உதிரி கதாபாத்திரங்களாகத்தான் இருப்பர். இப்படியான சூழலில் ஒவ்வொரு காலகடத்திலும், காட்சியமைப்பு, நடிப்பு, கதையம்சம் என சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கலைஞர்கள் பலர் நகர்த்திச் செல்வர். அப்படி நடக்கும் முயற்சியில் பல புதிய கலைஞர்களும் வெளிப்படுவர். 80-களின் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அப்படியான ஒரு மாற்றத்தின்போது கிடைத்த நடிகர் நாசர். தந்தையின் ஆசையால், `தசரா’ வின் போது நாடகங்களில் ஔரங்கசீப் வேடமிட்டவர், 35 வருடங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாக்களில் ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்தனர்.

துணை கதாபாத்திரம், கேரெக்டர் ஆர்டிஸ்ட் என சொல்லப்படும் வகைமையில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர்களில், சிலர் தவிர பலராலும் தொடர்ச்சியாகக் கவனம் பெறமுடியவில்லை. அதைத் தகர்த்து தன் நடிப்பால் கதாபாத்திர நடிகர்களுக்கென ஒரு சிம்மாசனத்தை கொண்டு வந்து, அதில் இவருக்குப் பின்னும் பலரும் வந்தமர்ந்து கவனம் பெற வைத்ததுதான் நாசரின் மிக முக்கிய பங்களிப்பு. வில்லன் எனப்படும் எதிர்மறை பாத்திரம் வெறுமனே கதாநாயகன், கதாநாயகியை வம்புக்கு இழுத்து உதை வாங்குவதாக மட்டுமிருந்தது. ஆனால், அதை கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரமாக மாறி நின்ற திரைகதைகளுக்கு கச்சிதமானத் தேர்வாக அமைந்தவர் நாசர். யோசித்துப் பார்த்தால் 80-கள் தொடங்கி தொடர்ச்சியாக ஒருவர் தமிழ் சினிமாவைப் பார்த்து வந்தால் அவர் அதிகமாக தமிழ் சினிமாவில் பார்த்த நடிகர் நாசராகத்தான் இருப்பார். கமல்ஹாசனுக்கு இணையாக, சொல்லப்போனால் கமலுக்கும்கூட அமைந்திடாத கதாபாத்திரங்கள் நாசருக்குக் கிடைத்தது. அவரும் அதை சரியாக நடித்து நியாயம் செய்திருக்கிறார். இது சாத்தியப்பட்டது வெறுமனே அவரின் தந்தை கண்ட கனவால் மட்டுமல்ல.
நடிப்பில் தன்னை தயார்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது. நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் நடித்தது மட்டுமின்றி, நவீன நாடக உலகத்திலும் கால் பதித்திருக்கிறார் நாசர். கூத்து, நவீன நாடகம், திரைப்பட நடிப்பு என்ற மூன்றின் மீதான நாசரின் புரிதல், பயிற்சி அபாரமானது. ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை, ஞாநியின் பரீக்ஷா நாடகக்குழு உள்ளிட்ட இலக்கியம், சமூகப் புரிந்துணர்வு கொண்ட நவீன தளங்களில் பங்கெகெடுத்துக் கொண்டார். சினிமா நடிப்பு, கூத்து, நாடக நடிப்பு மூன்றுக்குமான அளவுகோல் அவருக்குத் தெரியும்.

ஆழ்ந்த வாசிப்பனுபவம் அவருக்கு ஒரு பக்குவத்தை கொடுத்திருந்தது. 80 களில் புதுபொலிவான சினிமா அதுவரையிருந்த பல விஷயங்களை உதிர்த்தது. வழமையான அதே நாடகீய நடிப்பு முறை சலிப்பூட்டத் தொடங்கிய காலமது. இளையராஜா, பாரதி ராஜா, மணி ரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன் எனப் பலரும் வரத் தொடங்கிய காலம் அது. அந்த நேரத்தில் நடிப்பில் தன்னை மெருக்கேற்றினார் நாசர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நாடகத்துக்கு வகுத்திருந்த Method Acting முறையை சரியான விகிதத்தில் சினிமாவுக்குப் பொருத்தி அதில் வெற்றியும் பெற்றார். இந்த நடிப்பு முறையும், பயிற்சியும் அவரைத் தனித்துவப்படுத்தியது. இத்தகைய கடும் பயிற்சியால்தான் அவரால் பல விதமான கதபாத்திரங்களையும் நடிக்க முடிந்தது. 80-களில் தொடங்கிய அவரின் பயிற்சி 90 -களில் வெளிவந்த சினிமாக்களில் பரிமளித்தது.
`தேவர் மகன் – மாயன்’, `குருதிப்புனல்- பத்ரி’, `ஆவாரம் பூ – தேவர்’ என 90 களில் அவர் நடித்த இந்த பாத்திரங்கள் அனைத்தும் எதிர்மறை பாத்திரங்கள். `பத்ரி’ கதாபாத்திரம் ஏதும் பேசாத சாதாரண டிரைவராக அமர்ந்து கிடப்பது, அவர்தான் இயக்கத்தின் தலைமை எனத் தெரிந்த பிறகு அவரின் நடிப்பு என இரண்ட விதங்களில் நடித்திருப்பார். நாசரே இயக்கி நடித்த `அவதாரம்’ படத்தில் அப்பாவியான குப்புசாமியாக நடித்திருப்பார். அதே வருடத்தில் வெளியான `பாம்பே’, `குருதிப்புனல்’ படங்களில் வேறுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

`தேவர் மகன்’ படம் வெளியாகி தொடர்ச்சியாக எதிர்மறை பாத்திரத்தில் நடித்தவர், `வரவு எட்டணா செலவு பத்தணா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பார். அதே வருடத்தில் `மகளிர் மட்டும்’ படத்தில் சபலபுத்தியிருக்கிற ஒரு மேலதிகாரி பாத்திரத்தில் நடித்திருப்பார். `இருவர்’ படத்தில் அறிஞர் அண்ணா பாத்திரத்தில் நடித்தவர், `அவ்வை சண்முகி’ படத்தில் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி தொடர்ச்சியாக ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் சாயல்களற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் பலருக்கும் இப்படி பலவிதமான பாத்திரங்களில் தொடர்ச்சியாக ஒரே வருடத்தில் அடுத்தடுத்து நடிப்பது கைகூடவில்லை.
வில்லன், குணசித்திர கதாபாத்திரங்கள் என இவர் நடித்து வந்த இந்தக் காலகட்டத்தில்தான் `மின்சாரக் கனவு’ படத்தில் விழித்திறன் குறைபாடுடையவராக குரு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வணிக சினிமா தளத்தில் நடிப்பின் மீதான அளப்பறிய ஆர்வம் கொண்ட ஒருவர்தான் இத்தனை விதமான கதாபாத்திரங்களில் ஈடுபாட்டுடன் நடிக்க முடியும். ‘பொய் சொல்ல போறோம்’, ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார். பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகன்தான் இரட்டை வேடத்தில் நடிப்பார். ஆனால், `ஜீன்ஸ்’ படத்தில் அண்ணன் தம்பி யென இரு வேடங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார்.

2000 -க்குப் பிறகும் `எம் மகன்’ திருமலை கதாபாத்திரத்தின் மூலம் கண்டிப்பான ஒரு தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். `இந்தியன்’ படத்தில், நெடுமுடி வேணுவின் கம்பீரமான நடிப்புக்கு நாசரின் குரல் பக்க பலமாக இருந்தது. ‘Firaaq’ இந்தி படம், `நந்தலாலா’ படத்தின் சில நொடிகள் வரும் கதாபாத்திரம் என பல இயக்குநர்களின் குறிப்பிட்ட சிறிய பாத்திரமாக இருந்தாலும் நாசர் நடித்திருக்கிறார். வக்கீலாக, போலீஸாக, தந்தையாக, குருவாக என தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய படங்களில் நாசர் ஏதாவதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரங்களைத் தாண்டி பல கமர்சியல் சினிமாக்களில் தொடர்ச்சியாக நடித்தவர்.
இத்தனை படங்களில் நடித்தாலும் ஒரு முழு நேர நாடகக் கலைஞனாக இருந்திருக்க வேண்டும் என்கிற ஏக்கம் அவருக்கு உண்டு. அதை பலமுறை அவரே குறிப்பிட்டதும் உண்டு. கூத்தின்மீது அவருக்கிருந்த ஆர்வத்தால், அவர் இயக்கிய முதல் படமான `அவதாரம்’ படத்தில் கூத்துக்கலைஞனின் வாழ்வையொட்டி இருந்தது. அந்தப் படத்தில் அவர் நடித்திருந்த குப்புசாமி பாத்திரம் கிட்டத்தட்ட அவர் சொந்த ஆசையைப் போல கூத்துக் கலைஞனாக ஆசைப்படுபவனின் கதை. தொடர்ச்சியாக அவர் இயக்கிய `தேவதை’, `மாயன்’ உள்ளிட்ட படங்களும் வித்தியாசமான கதைகளங்களைக் கொண்டவை.

பல மொழிகளின் வணிக சினிமாக்களில் நடித்துப் புகழ்பெற்றாலும் இன்றும் திறமையான நடிகர்களை தொடர்ச்சியாக கவனப்படுத்தியிருக்கிறார். தான் பார்த்து ஆச்சர்யப்படும் நடிகர்களாக பசுபதி, ‘தலைவாசல்’ விஜய் , பாலா சிங், டெல்லி கணேஷ் இவர்களைக் குறிப்பிடுவார். `இவர்கள் எல்லாம் என்னைவிட திறமைசாலிகள்’ என அவர் சொல்வதுண்டு. `நடிகனாக ‘குருதிப்புனல்’ படத்தில் நான் நடித்த பாத்திரத்தைவிட சுபலேகா சுதாகர் நடித்த பாத்திரம்தான் சவாலானது. அதில் நான் நடித்திருக்கலாம்!’ `என்னைவிட கூத்துப்பட்டறை ஜெயக்குமார் நல்ல நடிகர்’. ` என்னிடம் திறமை என ஏதாவது இருப்பதாக நீங்கள் சொன்னால் அது என் குருநாதர்கள் சொல்லிக்கொடுத்தது மட்டுமே’. இவையெல்லாம் நாசர் அடிக்கடி குறிப்பிடுபவை. கூத்துக் கலைஞர் தட்சணா மூர்த்தி போன்ற ஆளுமைகளை பொதுத்தளங்களில் நினைவுப்படுத்தியிருக்கிறார்.
சொல்வதோடு இல்லாமல் தான் ஆச்சர்யப்பட்ட பசுபதியை தான் இயக்கிய `மாயன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். பாலா சிங் -கை அவதாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். நடிப்பை முறையாகக் கற்ற நடிப்பின் நுணுக்கங்கள் கைவரப் பெற்ற நாடகக் கலைஞர்கள் பலரை சினிமாவுக்குள் அழைத்து வந்திருக்கிறார். ஒரு நடிகராக, கலைஞனாக அவர் செய்த இந்த நடிகர்கள் அறிமுகம் பாராட்டுதலுக்குரிய ஒன்று. இத்தனை வருடம் நடிக்கிறீர்கள். இந்தப் பாராட்டு, பெருமையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “சக மனிதர்கள் மலக்குழிக்குள் இறங்கி மலம் அள்ளிக் கொண்டிருக்கும் வரை, `நான் நன்றாக இருக்கிறேன்’ என யாராலும் இங்கு பெருமிதம் கொள்ள முடியாது” எனச் சொல்கிறார்.

நல்ல கலைஞர்களை அடையாளப்படுத்திய நாசர் இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர். பணம், புகழ் என சினிமாவின் வெல்வெட் முகம் மட்டுமே மக்களுக்குத் தெரியும். அரிதாரம் பூசிய, பூச வாய்ப்பற்ற பல கலைஞர்கள் தங்கள் வாழ்வையே தொலைத்த சினிமாவின் மற்றொரு முகம் பலரும் அரியாதது. அதில் ஒழுங்குபடுத்த வேண்டிய விஷயங்களும் உள்ளன. இதையெல்லாம் சமூகம் பற்றிய ஆழமான புரிந்துணர்வு கொண்ட ஒருவரால் சரிசெய்ய முடியும். “இது பல வருட சங்கம், முதலில் சரியாகப் புரிந்துகொண்டு சிக்கல்கள் ஆராய்ந்து செம்மை செய்வேன்” சங்கம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாசர். நடிகர் ராதா ரவி, முன்னணி நடிகை குறித்து தரக் குறைவாகப் பேசியதை முதலில் கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். `நேர்காணல்களில், மேடைகளில் பெண்களை இழிவு படுத்துவதுபோல ஒரு மூத்த கலைஞர் பேசுவது முறையல்ல என அறிவுறுத்தியது’, `நலிவுற்ற கலைஞர்கள் குறித்துப் பேசியது’, `திரை நடிப்புக்கென பயிற்சி பள்ளி வேண்டுமெனக் கூறியது’ இப்படி பல விஷயங்களில் அவரின் பார்வை நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. அவை செயல்வடிவம் பெறவேண்டும்.
நாசர் இயக்கிய `அவதாரம்’ திரைப்படத்தில், `தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். படத்தின் நாயகி ரேவதி பார்வையற்றவர். அந்த பாடல் காட்சியின் தொடக்கத்தில் நிறங்கள் கலவையாகி பார்வையற்ற ரேவதியின் முகம் தோன்றும்.அது, வாழ்வின் எதார்தத்துக்கும், கனவுக்கும், ஆசைக்குமான முரணைச் சொல்வதுபோல இருக்கும். பாடல் முழுக்கவே அடர் சிவப்பு நிறம், குழந்தைகள் கைகளில் வண்ணங்கள், பச்சை பசேல் என்ற வயல்வெளி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

நிறம் என்பதென்ன, மனக் கண்களில் தெரியும் நிறம் என்ன, எண்ணங்கள்தான் எல்லாம் என்பதாகப் பாடலைக் காட்சிப்படுத்தியிருப்பார். அதில் ஒரு காட்சியில் ரேவதி தன் கைகளால், கடவுள் சிலையை வருடிக் கொண்டிருப்பார். தன் கண்களுக்குத் தெரியாத மனதால் உணர முடிந்த ஒன்றை அவர் விரல்களால் தேடுவார். இந்த உலகில் கலைஞர்கள் பலரும் தாம் நேசிக்கும் கலையின் சாரத்தை, அதன் உன்னதத்தை, பலருக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாத ஒன்றை, அதை நோக்கிய தங்கள் கனவைத் தேடுவதை அந்தக் காட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். எதார்த்த வாழ்வில் கலையின் நிமித்தம், பெரும் கனவுகளைக் கொண்ட நாயகன் நாசர். அந்தக் கனவுகளும், பொறுப்புமிக்க உங்களின் எண்ணங்களும் வசப்பட பிறந்தநாள் வாழ்த்துகள் நாசர்!
2022 -இல் எழுதப்பட்ட கட்டுரை