Rohit Sharma : '11 பேரும் ஃபார்ம்ல இருக்கோம்!'- ரோஹித் மகிழ்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பதுதான் இந்தப் போட்டியின் சுவாரஸ்யம். பாதி போட்டி முடிந்தபோது இது ரொம்பவே நல்ல ஸ்கோராக தெரிந்தது. நாங்கள் ரொம்பவே சிறப்பாக ஆடினால்தான் வெல்ல முடியும் என தோன்றியது.

சேஸிங்கை நாங்கள் ரொம்பவே பக்குவமாகவும் நிதானமாகவும் அணுகினோம் என நினைக்கிறோம். இங்கேயுள்ள பிட்ச்களில் ஒருவித சீரற்ற தன்மை இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய பிட்ச்சை விட இந்த பிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது.

பிட்ச் கொஞ்சம் சீரற்று இருப்பதால் பேட்டிங் ஆடும் சீனியர்களிடமே எப்படி ஆட வேண்டும் என்கிற முடிவையும் விட்டுவிட்டோம். 6 பௌலிங் ஆப்சன்கள் இருந்ததும் நம்பர் 8 வரை பேட்டிங் இருந்ததும் அற்புதமான விஷயம்.

கோலி இதேமாதிரியான பணியை அணிக்காக பல ஆண்டுகளாக செய்து கொடுத்திருக்கிறார். எங்களுக்கு தேவைப்பட்ட பெரிய பார்ட்னர்ஷிப்பை கோலியும் ஸ்ரேயாஷ் ஐயரும் கொடுத்துவிட்டார்கள். இறுதிப்போட்டியில் ஆட நினைத்தால் நம்முடைய எல்லா வீரர்களும் ஃபார்மில் இருக்க வேண்டும்.

அப்படியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும் கொடுக்கிறது. தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மிகச்சிறந்த அணிகள். நாளை எங்களுக்கு விடுமுறை. அந்தப் போட்டியை பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கப்போவதில்லை. வீரர்கள் தங்களை இலகுவாக்கிக் கொள்ள நாளைய தினம் பயன்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.