UP: சட்டமன்றத்தில் பான் மசாலா எச்சில்… MLA-வைக் கண்டித்த சபாநாயகர்!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் சதீஷ் மகானா, சபையின் உள் வளாகத்தில் தரை விரிப்பு மீது பான் மசாலா துப்பியதற்காக சட்டமன்ற உறுப்பினரைக் கடிந்துகொண்டுள்ளார். அத்துடன், அனைவரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தரைவிரிப்பில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ யார் என்பதை சபாநாயகர் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட உறுப்பினர் தன்னை நேரில் வந்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அப்படி வந்து சந்திக்காவிட்டால் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

சபாநாயகர் சதீஷ் மகானா

“யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை”

சட்டமன்றத்தில் பேசிய சதீஷ் மகானா, “நம் மாநில சட்டப்பேரவை(Vidhan Sabha) நடைபெறும் இந்த அறையில், உறுப்பினர் ஒருவர் பான் மசாலா உட்கொண்டு துப்பியுள்ளார். நான் இங்கு வந்து அதை சுத்தப்படுத்தியுள்ளேன். நான் அந்த சட்டமன்ற உறுப்பினரை வீடியோவில் பார்த்தேன். ஆனால் இப்போது யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. அதனால் நான் அவரை பெயரைத் தெரிவிக்கவில்லை. நான் எல்லாரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஒருவர் இப்படி செய்யும்போது நீங்கள் பார்த்தால் அவரை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “இந்த அவையை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை. இந்த MLA அவராகவே முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால் அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தரைவிரிப்பை சுத்தப்படுத்தும் வீடியோவில், சபாநாயகர் தரைவிரிப்பை மாற்றுவதற்கான பணம் அந்த எம்.எல்.ஏ-விடம் இருந்து பெறப்பட வேண்டும் எனக் கூறுவதைக் கேட்கலாம்.

இந்த விவாதத்தின்போது மாநிலத்தில் உள்ள 25 கோடி மக்கள் சட்டமன்றத்தின் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளனர் என எம்.எல்.ஏ-க்களுக்கு நினைவூட்டினார் சபாநாயகர் சதீஷ் மகானா.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.