புதுடெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்சியாக குற்றம்சாட்டி வருகிறது.
பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியும், அது அமைதியாக உள்ளது என்றும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் உடனான இந்திய தலைமை தேர்தல் ஆணைய கருத்தரங்கின் முதல் நாளான நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில தேர்தல் ஆணையத்துடன் அரசியல் கட்சிகளுக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதனை களைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சட்டப்பூர்வ கட்டமைப்புகளுக்கு உட்பட்டு அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.
பொய்யான புகார்களை பயன்படுத்தி எந்தவொரு தேர்தல் பணியாளர்களையோ அல்லது அதிகாரிகளையோ மிரட்ட கூடாது. அனைத்து சட்டப்பூர்வ கடமைகளையும் விடாமுயற்சியுடன் தற்போதுள்ள கட்டமைப்பின்படி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.