ஜெனிவா: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) கனடா புகார் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற குடியரசு கட்சியின் தலைவர் டொனால்டு ட்ரம்ப், அண்டை நாடான கனடாவை அமெரிக்காவுடன் இணைய அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை நிராகரிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். கனடாவும், மெக்சிகோவும் சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்கத் தவறிவிட்டதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், இவ்விரு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி 25% அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதேபோல், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10% உயர்த்திய ட்ரம்ப், பின்னர் அதனை 20% ஆக உயர்த்தினார்.
இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று குற்றம்சாட்டிய ட்ரம்ப், இதை கருத்தில் கொண்டு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அதே அளவு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2-ம் தேதி அமலுக்கு வரும் என்றும் அறிவிததார்.
தங்கள் நாட்டு பொருட்களுக்கு கூடுதலாக 20% வரி உயர்வை அறிவித்துள்ள அமெரிக்காவை கண்டித்துள்ள சீனா, அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, இறுதி வரை போராட நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த கூடுதல் வரிவிதிப்பை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் தெரிவித்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து கனடாவும், அமெரிக்கா மீது உலக வர்த்தக அமைப்பில் புகார் தெரிவித்துள்ளது. இதனை உலக வர்த்தக அமைப்பு இன்று (மார்ச் 5) உறுதிப்படுத்தியது. கனடாவின் புகார் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்புக்கான கனேடிய தூதர் நாடியா தியோடர், “அமெரிக்காவின் முடிவை எதிர்கொள்ள எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, கனடா அரசாங்கத்தின் சார்பாக, கனடா மீதான அமெரிக்காவின் நியாயமற்ற வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் ஆலோசனைகளைக் கோரியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
கனடா பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இது முட்டாள்தனமான வர்த்தகப் போர். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதை எளிதாக்க தங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறார்” என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.