அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர்.
இங்கு 1529-ம் ஆண்டு முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் பசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் அளிக்கவும், அயோத்தியில் தானிப்பூர் என்ற இடத்தில் புதிய மசூதி கட்ட நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இங்கு பிரம்மாண்ட அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்கிறது.
அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த, அயோத்தி மாவட்டத்தின் பைசாபாத் நகரின் மில்கிபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபுபக்கர் (19) என்ற இளைஞரை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். இவர் ஹரியானாவின் பரிதாபாத்தில் சங்கர் என்ற பெயரில், உணவு விடுதி ஒன்றில் பணியாற்றுகிறார். பகுதி நேர தொழிலாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
அயோத்தி ராமர் கோயில், உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை உளவு பார்க்கும் பணி அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு தீவிரவாத அமைப்பின் நெட்வொர்க் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
இது குறித்த தகவல் குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. அவர்கள் ஹரியானா சிறப்பு படை போலீஸாருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பென் டிரைவ் மீட்கப்பட்டது. அதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆகியவை இருந்தன. இத்தகவல்களை ஆராய்ந்த போது விரைவில் அயோத்தி ராமர் கோயில் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. அங்கு இரண்டு கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.
இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடனே டெல்லி வரும்படி உத்தரவிடப்பட்டது. அவர்கள் ஊழல் தடுப்பு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தனர். தீவிரவாத சதியில் வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதா என மத்திய உளவுத்துறை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. உள்ளூரில் அப்துல் ரகுமானுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஹரியானா சிறப்பு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சதியில் பலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உளவு தகவல் கொடுத்த ரயில்வே ஊழியர் கைது: அயோத்தி கோயிலை தகர்க்க சதி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.
ரயில்வேயில் பணிபுரிந்து வரும் பிகானீரைச் சேர்ந்த பவானி சிங்கை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் `ஹனி டிராப்` மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் மயங்கிய பவானி சிங், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். நிம்மி என்ற பெயரில் பவானி சிங்குக்கு அறிமுகமாகி அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார் அந்த பெண் உளவாளி. உளவு அமைப்பை சேர்ந்தவர்கள், ஒருவரை கவர்ந்து மயக்கி அவரிடமிருந்து தகவல்களை பெற்று தங்கள் உளவு நிறுவனத்துக்கு கொடுப்பதை `ஹனி டிராப்’ என்று அழைக்கின்றனர். நீண்ட நாட்களாக உளவு சொல்லி வந்ததாக அண்மையில் ராஜஸ்தான் போலீஸார் பவானி சிங்கை கைது செய்துள்ளனர்.