ODI Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து (South Africa vs New Zealand) அணிகள் மோதுகின்றன. இன்று வெற்றி பெறும் அணி வரும் மார்ச் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா உடன் மோதும்.
ODI Cricket: பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளித்த சாம்பியன்ஸ் டிராபி!
மேலும் இந்திய அணி (Team India) தகுதிபெற்றிருப்பதால் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பதும் உறுதியாகிவிட்டது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருங்கிணைத்திருந்தாலும் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இயலாது என கூறியதால் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி துபாயில் விளையாடியது. பாகிஸ்தான் அணியே (Team Pakistan) இந்திய உடனான போட்டியை துபாய் வந்துதான் விளையாடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடரை ஒருங்கிணைத்த நிலையில், இந்த தொடர் அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இந்தியா துபாயில் விளையாடும் முடிவை அறிவித்த தொடர் தொடங்கும் முன்பே முக்கிய பின்னடைவாக அமைந்தது என்றாலும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான தோல்வி, மூன்று போட்டிகள் மழையால் ரத்து செய்தது என பல்வேறு காரணங்கள் இந்த தொடர் பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது எனலாம். தற்போது இறுதிப்போட்டியும் அங்கு நடைபெறவில்லை.
ODI Cricket: ‘3 போட்டிகள் மட்டுமே சுவாரஸ்யமாக இருந்தன’
ஆனால், இந்த சாம்பியன்ஸ் டிராபி மட்டுமின்றி அடுத்த 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரும் விறுவிறுப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) கடந்த சில நாள்களுக்கு முன் அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியிருந்தார்.
மேலும், நேற்றைய இந்திய அணி வெற்றிக்கு பின் அவரது யூ-ட்யூப் சேனல் நேரலையில் பேசிய அவர்,”இந்த தொடரிலேயே இதுவரை மூன்று போட்டிகள்தான் நன்றாக இருந்தது. ஒன்று இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டி, இரண்டாவது இந்தியா – நியூசிலாந்து எதிரான போட்டி, இன்னொரு இந்தியா – ஆஸ்திரேலியா ஆகியவைதான் சுவாரஸ்யமாக இருந்தன” என ஒரு போடாக போட்டுள்ளார்.
ODI Cricket: ஏன் இந்த ஓடிஐ கிரிக்கெட்டை பார்க்க வேண்டும்?
இதற்கான காரணத்தையும் அவர் கூறினார். ஒரு அணி 350 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் அடிப்பதும், இரண்டாவது இன்னிங்ஸில் 350 ரன்களும் சேஸ் செய்யப்பட்டுவிடுகிறது. எனவே ஓடிஐ கிரிக்கெட் (ODI Cricket) வெறும் பேட்டர்களுக்கான கிரிக்கெட்டாக மாறிவிட்டதாகவும், பந்துவீச்சாளர்களுக்கு இதில் பெரிதாக ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். இந்த போட்டியை ஏன் ஒரு கிரிக்கெட் ரசிகர் 8 மணிநேரம் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ODI Cricket: விதிமுறையால் ஏற்பட்ட சோகம்
முதல் 25 ஓவர்களில் இரு முனைகளில் தலா ஒரு பந்து, இரண்டாவது பவர்பிளேவில் கண்டிப்பாக 5 பீல்டர்கள் 30 யார்ட் வட்டத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதி ஆகியவை ஸ்பின்னர்களுக்கு எவ்விதத்தில் சாதகமாக இருக்காது. 11-40 ஓவர்கள் வரை வெளிவட்டத்தில் 4 பேரை நிற்கவைத்து பந்துவீசுவது என்பது ஸ்பின்னர்களை அதிக ரன்களை கொடுக்க வழிவகுக்கும் விதியாகவும் இருக்கிறது (ODI Cricket Rules).
இரு முனைகளிலும் தலா ஒரு பந்து கொடுப்பதால் பந்து பெரியளவில் மாற்றம் அடையாமல் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கான (Reverse Swing) வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு அஸ்வின் மட்டுமல்ல சச்சின் உள்பட பலரும் எதிர்க்கின்றனர். இந்த விதிகளை மாற்றி ஒரு பந்தை வைத்தே பந்துவீச வேண்டும் என்ற பழைய விதியை கொண்டுவர வேண்டும் என்றும் 11-40 ஓவர்களில் வெளிவட்டத்தில் 5 பீல்டர்களை வைக்கும் விதியை கொண்டுவர வேண்டும் என்றும் அஸ்வின் கோரிக்கை வைத்தார்.
ODI Cricket: அஸ்வினிடம் வருத்தப்பட்ட தோனி
மேலும், இதுகுறித்து தான் தோனியிடம் (MS Dhoni) பேசிக்கொண்டிருந்ததாகவும், தோனியும் தனது வருத்தத்தை தன்னிடம் வெளிக்காட்டியதாகவும் அஸ்வின் நேற்றைய நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். அதாவது, “நாங்கள் விளையாடும் போது ஓடிஐ கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கம் இருந்தது. அது இப்போது இல்லை” என்று தோனி அஸ்வினிடம் கூறியதாக அவரே பதிவு செய்துள்ளார்.