லக்னோ,
மராட்டிய மாநில சட்டசபையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி பேசுகையில், முகலாய மன்னர் அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர் அல்ல என்றும், அவர் பல கோவில்களை கட்டினார் என்றும் கூறினார். அதோடு, அவுரங்கசீப் மற்றும் சாம்பாஜி இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போர் நடைபெற்றதாகவும், அது மதம் சார்ந்த போர் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அபு ஆஸ்மி தெரிவித்தார். மேலும் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து அபு ஆஸ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவுரங்கசீப் பற்றி பேசிய எம்.எல்.ஏ.வை சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து உத்தர பிரதேச சட்டசபையில் பேசியபோது அவர் கூறியதாவது;-
“அந்த நபரை(அபு ஆஸ்மி) சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, அவரை உத்தர பிரதேசத்திற்கு அனுப்புங்கள். நாங்கள் அவரை கவனித்துக் கொகிறோம். சத்ரபதி சிவாஜியின் பாரம்பரியம் குறித்து பெருமைப்படாமல், அதை அவமானமாக கருதுபவரும், அவுரங்கசீப்பை தனது முன்மாதிரியாக கொண்டிருப்பவரும் நம் நாட்டில் இருக்க உரிமை உள்ளதா?
சமாஜ்வாடி கட்சி இதற்கு பதிலளிக்க வேண்டும். ஒருபுறம், நீங்கள் மகா கும்பமேளா குறித்து விமர்சனம் செய்கிறீர்கள். மறுபுறம், நாட்டின் கோவில்களை அழித்த அவுரங்கசீப் போன்ற ஒருவரை புகழ்கிறீர்கள். உங்கள் எம்.எல்.ஏ.வை ஏன் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை? அவரது கருத்தை சமாஜ்வாடி கட்சி ஏன் கண்டிக்கவில்லை?”
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.