வாஷிங்டன்: இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.
அமெரிக்கா அதிபராக இரண்டவாது முறையாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க கூட்டு காங்கிரஸில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய தனது முதல் உரையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதிக வரிகளை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுக் கொள்கைகளை மாற்றியமைத்த, முக்கிய கூட்டாளிகளுடனான வர்த்தக மோதல் மற்றும் கணிசமான அளவில் மத்திய அரசு ஊழியர்களை குறைத்தது போன்ற அவரது துணிச்சலான நடவடிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இவை அனைத்தும் அவர் பதவியேற்று ஆறு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ட்ரம்ப் தனது உரையில், “எனதருமை மக்களே அமெரிக்கா மீண்டும் திரும்ப வந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் மற்றவர்கள் செய்ததை விட இந்த 43 நாட்களில் நாங்கள் அதிகம் சாதித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
பரஸ்பர வரி விதிப்புகளை அமல்படுத்துவதில் தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் உங்களின் பொருள்களை உற்பத்தி செய்யவில்லையென்றால், அந்தப் பொருள்களுக்காக நீங்கள் ஒரு வரியை செலுத்தவேண்டியது இருக்கும். சில நேரங்களில் அது மிகப்பெரியதாக இருக்கும். பிற நாடுகள் அனைத்தும் பல தசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதித்து வருகின்றன. இப்போது நாம் அதை அவர்களுக்குத் திருப்பி செய்யும் நேரமிது.
சராசரியாக, ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா… நீங்கள் அவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்னும் பல நாடுகள் நாம் அவர்களிடமிருந்து வசூலிப்பதை விட அதிகமான வரிகளை நமக்கு எதிராக விதிக்கின்றன. அது மிகவும் அநீதியானது.
இந்தியா நம்மிடமிருந்து 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன கட்டணங்களை வசூலிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதிக்கும் கட்டணங்கள் நாம் அவர்களின் பொருள்களுக்கு விதிக்கும் கட்டணங்களை விட இரண்டு மடங்கு அதிகம். தென்கொரியா விதிக்கும் கட்டணம் நான்கு மடங்கு அதிகம்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்த நாடுகளுக்கு எதிரான பரஸ்பர கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ஏப்ரல் 1ம் தேதியில் என நான் ஏன் அறிவிக்கவில்லை என்றால், அது முட்டாள்கள் தினத்துடன் ஒத்துப்போவதை விரும்பவில்லை. ஏப்.2-ம் தேதியில் இருந்து அவர்கள் என்ன கட்டணங்கள் நமக்கு விதித்தாலும் நாமும் அவர்களுக்கு ஒரு பரஸ்பர கட்டணத்தை விதிப்போம். அது அவர்கள் கட்டணங்களுடன் முன்னும் பின்னும் இருக்கும்.
அவர்கள் நம்மை அவர்களின் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை (non-monetary tariffs) செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அவர்களை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை நாமும் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு அறிவிப்புக்கு அவையில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். அமெரிக்கா தனது அண்டை நாடானா மெக்சிகோ மற்றும் கனடா பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பினை செவ்வாய்க்கிழமை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.