கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் விருப்பம்.. டிரம்ப் வரவேற்பு

நியூயார்க்:

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தரப்பிடமும் அமெரிக்கா பேசிவருகிறது. முதலில் ரஷியாவை வரவழைத்து அரபு நாட்டில் வைத்து போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேசியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலின்போது, டிரம்ப்பின் கருத்தை மறுத்து எதிர்வாதம் செய்தார் ஜெலன்ஸ்கி. இதனால் ஜெலன்ஸ்கியை டிரம்ப் திட்டி அனுப்பிவிட்டார்.

நெருக்கடியில் இருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவி குறித்து ஜெலன்ஸ்கியிடம் கூறிய டிரம்ப், இதற்காக தங்கள் நாட்டுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது ஒருபுறமிருக்க உக்ரைனுக்கு இதுவரை செய்த செலவுகளுக்கு ஈடாக, அந்நாட்டில் உள்ள கனிமவளங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டபோதிலும், அமெரிக்காவுடனான கனிமவள ஒப்பந்தம் மேற்கொள்ள உக்ரைன் தயாராக உள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ரஷியாவுடனான நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவதற்காக டிரம்ப் தலைமையின் கீழ் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாகவும் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். இந்த முடிவை டிரம்ப் வரவேற்றுள்ளார்.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசியதாவது:-

உக்ரைன் அதிபரிடம் இருந்து இன்று முக்கியமான கடிதம் வந்தது. நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக விரைவில் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தயாராக உள்ளது என அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். நீடித்த அமைதியை பெற ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பராமரிக்க அமெரிக்கா செய்த உதவிகளுக்கு மதிப்பு அளிப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பொறுத்தவரை, உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அதில் கையெழுத்திட உக்ரைன் தயாராக உள்ளது என ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். இந்த கடிதத்தை அனுப்பியதற்காக அவரை பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில், ரஷியாவுடனும் தீவிரமான விவாதங்களை நடத்தியுள்ளோம். அவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்காலத்தில் அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்க இந்த கனிமவள ஒப்பந்தம் உதவும் என்று டிரம்ப் கூறியது குறிப்படத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.