இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு தொழில் துறை செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் காணொலி மூலம் அவர் நேற்று பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்துறையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 3-வது முறையாக பதவியேற்று உள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது அனைத்து உலக நாடுகளும் இந்தியாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்த வாய்ப்பை தொழில் துறையினர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுயசார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிஎல்ஐ திட்டத்தின் மூலம் 14 துறைகள் நிறைவான பலன்களை பெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 7.5 கோடி ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சுமார் 1.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. 13 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்று மதி செய்யப்பட்டு உள்ளன.
எளிதாக தொழில் தொடங்க, தொழில் நடத்த ஏதுவாக சுமார் 40,000-க்கும் மேற்பட்ட கடினமான நடைமுறைகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு தொழில் துறை செயல்படுகிறது. இந்த துறை சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறு, சிறு தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொம்மை உற்பத்தியாளர்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வரம்பு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை, வளர்ச்சியின் மையமாக பார்க்கின்றன. உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. சவாலான சூழல்களை நமது நாடு திறம்பட எதிர்கொண்டு முன்னேறுகிறது.
சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகளால் உலக பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண வலுவான விநியோக சங்கிலியை ஏற்படுத்த இந்தியா அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
நமது நாட்டின் ஒவ்வொரு தொழில் துறையும் ஓர் அடி முன்னோக்கி எடுத்து வைக்க வேண்டும். அப்போது ஒட்டுமொத்த நாடும் முன்னேற்றம் அடையும். இந்தியாவின் பொம்மைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நேரத்தில் இந்திய பாரம்பரிய கைவினைப்பொருட்களின் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. முதலீட்டை அதிகரிப்பதில் மாநிலங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வணிகம் செய்வதை எளிதாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.