சென்னை: தமிழகக் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175-வது நிறுவன தினவிழா சென்னை கிண்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார், முன்னாள் இயக்குநர் ஏ.சுந்தரமூர்த்தி உட்பட பல்வேறு அலுவலர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 175-வது ஆண்டை முன்னிட்டு மையத்தின் சார்பில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது: மழை பெய்வது போன்று நில அதிர்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக நில அதிர்வின் பதிவுகளும் அதிகமாக உள்ளன. சென்னை கருங்கல் மீது உள்ள ஒரு பகுதியாகும். அதனால் சென்னையில் நில அதிர்வு தொடர்பாக பயப்பட வேண்டிய சூழல் இல்லை. ஆனால் கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்டிடங்களைக் கட்டாமல் இருப்பது நல்லது. அந்தப் பகுதிகளில் நில அதிர்வுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல், தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்ற விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். இது தவிர நாடு முழுவதும் உள்ள கனிமவளங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்பட சில பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது செல்போன் பேட்டரிக்கு பயன்படும் லித்தியம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறியப்பட்டுள்ளன. அதுகுறித்த தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.