சென்னை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026-ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் “மாநிலங்களின் மக்கள் தொகை” என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
நம் அரசியல் சாசனத்தின் 81-வது சட்டப்பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமான வரையில் “சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதற்கு அடிப்படையான ‘One vote-one value’ என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
இந்நிலையில், புதிய நாளாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது.
ஏனென்றால், தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை; Ballot முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.
‘நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை’ என்பது மக்கள் பிரச்சினையே இல்லை. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளது. அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்; மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தமிழகத்தின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்சினையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும்.
அம்பேத்கர் அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று Federalism எனப்படுகிற ‘கூட்டாட்சித் தத்துவ முறை’. ஆதலால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அம்பேத்கர் அவர்களுக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.