போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு 2 டன் உயிர் காக்கும் மருந்துகள் இந்தியா அனுப்பியுள்ளது.
சூடானில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிராக துணை ராணுவப் படை போரிட்டு வருகிறது. இதில் இரு படைகளின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடான், தெற்கு சூடான் மற்றும் சாத் பகுதியில் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூடான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடலோர காவல் படையின் கப்பல் சூடான் புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் புற்று நோய் மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகள் 2 டன்களுக்கு மேல் உள்ளன” என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்திய கடலோர காவல் படையின் சாசெட் கப்பல் ஜிபூட்டி நோக்கி புறபட்டுச் சென்றது. அதில் 20 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான சாதனங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்தியா கடந்த மாதம் புயலால் பாதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டுக்கு 26 டன் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியது. கடந்த ஜனவரி 27-ம் தேதி இராக்கின் குர்திஸ்தான் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது.