மகா கும்பமேளா பற்றி விமர்சனம் செய்த ஆசியாநெட் டி.வி. சேனலின் உயர் அதிகாரிக்கு, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம்’ என்பதை உரிமையாளர் ராஜீவ் சந்திர சேகர் நினைவு படுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர். இந்நிலையில் ஆசியாநெட் நியூஸ் என்ற மலையாள செய்தி சேனலில் கடந்த 1-ம் தேதி ‘கவர் ஸ்டோரி’ என்ற தலைப்பில் வெளியான வாராந்திர நிகழ்ச்சியில், மகா கும்பமேளா பற்றிய செய்தி தொகுப்பு வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி கங்கையில் புனித நீராடும் நிகழ்ச்சி காட்டப்பட்ட பின்பு, ‘‘நல்ல விளம்பரம், நல்ல வியாபாரம். 100 சதவீதம் கற்றறிந்த மாநிலமாக கேரளா இருந்தாலும் கூட இங்கிருந்தும் பலர் கும்ப மேளாவில் சென்று நீராடினர்’’ என விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியானது.
இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சேனலின் உரிமையாளர் பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அவருக்கு சொந்தமான செய்தி சேனலில் மகா கும்பமேளாவை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியானதுதான் பலரை ஆச்சர்யப்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்துள்ள ராஜீவ் சந்திரசேகர், ‘‘ இந்த நிகழ்ச்சி தங்களை புண்படுத்தியதாக மலையாள மக்கள் பலர் எனக்கு தகவல் அனுப்பினர். ஒவ்வொரு இந்துக்கும் நம்பிக்கை முக்கியம் என்பதை செய்தி சேனலை நடத்தும் உயர் அதிகாரிக்கு நினைவுபடுத்தியுள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.