டெல்லி அருகேயுள்ள குருகிராமில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி, அவரது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்து ரூ.35 லட்சத்தை மீட்டுள்ளனர்.
டெல்லி அருகேயுள்ள குருகிராமில் வசிக்கும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவரது பாட்டி, தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த ரூ.80 லட்சத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார்.
அந்த கணக்கில் ஆன்லைன் பணபரிமாற்றத்துக்கு தனது பேத்தியின் உதவியை நாடியுள்ளார். இதை அந்த மாணவி தனது வகுப்பு நண்பர்களுடன் பெருமையாக கூறியுள்ளார். இத்தகவலை அறிந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது சகோதரனிடம் கூறியுள்ளான். அவர் இத்தகவலை தனது நண்பர் சுமித் கட்டாரியாவிடம் கூறி சிறுமியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து சுமித் கட்டாரியா, மாணவியுடன் ஆன்லைன் மூலம் நட்பை ஏற்படுத்தினார். பின்னர் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார். அவர் கூறிய செல்போன் எண்களில் சிறுமி பல முறை, பாட்டியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அனுப்பியுள்ளார். வங்கி கணக்கில் இருந்த பணம் காலியானது. மிரட்டியவர்களில் ஒருவர் மாணவி டியூசன் படிக்கும் இடத்துக்கு சென்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவி மிகுந்த சோகத்துடன் இருந்துள்ளார். இது குறித்து டியூசன் ஆசிரியர் கேட்டதும், நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
டியூசன் ஆசிரியர் மாணவியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பாட்டி கடந்த டிசம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மோசடி தொடர்பாக போலீஸார் 6 பேரை கைது செய்து ரூ.36 லட்சத்தை மீட்டுள்ளனர்.