மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 45 கட்சி தலைவர்களையும் சந்தித்து விளக்க உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொடங்கி வைத்தார். சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ‘‘தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டிதொட்டியெல்லாம் மக்களிடம் இதை கொண்டு சென்று, ஒரு கோடி கையெழுத்து பெற்று, மே இறுதிக்குள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக மக்களின் குரலாக அதை வழங்க உள்ளோம். 1965 திமுகவுக்கானது என்றால், 2025 பாஜகவுக்கானது’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகம் முழுவதும் பூத் வாரியாக பாஜக தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று கையெழுத்தை பெற இருக்கின்றனர். சமக்கல்வி இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் கையெழுத்திடலாம். மார்ச் 23-ம் தேதி திருச்சி, 29-ம் தேதி திருநெல்வேலி, ஏப்.5-ம் தேதி வேலூர், 12-ம் தேதி காஞ்சிபுரம், 19-ம் தேதி சேலம், 26-ம் தேதி சென்னை, மே 3-ம் தேதி மதுரை, 11-ம் தேதி கோவையில் மும்மொழி கொள்கை குறித்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
‘விகிதாச்சாரம் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும். இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது’ என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. இதுபற்றி எதுவுமே தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார் என்று புரியவில்லை. எந்த முகாந்திரமும் இல்லாமல், மக்களிடம் பயத்தை ஏற்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்துக்கு வந்த 45 கட்சிகளுக்கும் தனித்தனியாக பாஜக சார்பில் கடிதம் எழுத உள்ளோம். எங்களது கட்சி தலைவர்கள் அந்த 45 கட்சி தலைவர்களையும் சந்தித்து, தொகுதி மறுசீரமைப்பில் ஏதாவது சந்தேகம் இருந்தால், விளக்கி கூறுவார்கள்.
மநீம தலைவர் கமல்ஹாசன், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். ‘‘நாடாளுமன்றத்தில் அனைவரும் பொம்மைபோல உட்கார்ந்திருக்கிறார்கள், எதற்காக எம்.பி.?’’ என்று தவெக தலைவர் விஜய் கேட்டுள்ளார். எம்.பி. என்றால் என்ன என்று அவருக்கு யாராவது விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சரத்குமார் அறிக்கை: பாஜக நிர்வாகி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுப் பள்ளி மாணவர்கள் இருமொழிகளை மட்டுமே படிக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? எளிய மாணவர்களின் உரிமையை, கல்வி உரிமையை மீட்க குரல் கொடுக்கும் எங்களது குரல்களை நசுக்க நினைப்பதும், மாணவர்கள் வளர்ச்சியை தடுக்க நினைப்பதும் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது.
கல்வி அனைவருக்கும் சமமாக, பொதுவாக ஒரேமாதிரி இருக்க வேண்டும். ஏழைகளுக்கு ஒரு கல்வி, வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி என்பது எப்படி சமத்துவம் ஆகும்? பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில் பெருவாரியான மக்களை பங்குபெற செய்து ஆதரவு திரட்டுவோம். உண்மை நிலையை அரசுக்கு எடுத்துரைத்து மும்மொழி கொள்கையை நிறைவேற்ற பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.