ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதல், பாதுகாப்புப் பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல பிரிவுகளில், இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், தேர்தல் பாதுகாப்பு, வி.ஐ.பி பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், பயிற்சி மையத்துக்கு `ராஜாதித்ய சோழன்’ பெயரைச் சூட்டி, பிப்ரவரி 24-ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது மத்திய அரசு.

ராஜாதித்ய சோழன், முதலாம் பராந்தகச் சோழரின் மகன். 948 – 949 இடைப்பட்ட காலத்தில் நடந்த தக்கோலப் போரில், ராஜாதித்ய சோழனின் உயிர் பறிக்கப்பட்டது. போரில் தோற்றாலும், ராஜாதித்யனின் வீர மரணம் தமிழர்களின் மனதில் முத்திரை பதித்தது. தக்கோலப் போர் நடந்த அன்றைய இடம்தான் சி.ஐ.எஸ்.எஃப் மையம் அமைந்துள்ள இன்றைய தக்கோலம்.
இந்த நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, நாளை மறுநாள் ( மார்ச் 7 ) வெள்ளிக்கிழமை, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நிகழ்வில், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களின் எழுச்சி தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகிறார். காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனிடையே, 6,553 கி.மீட்டர் தூரத்திலான சி.ஐ.எஸ்.எஃப் ( CISF கோஸ்டல் சைக்ளோத்தான் ) கடலோர சைக்கிள் பேரணியையும் வீடியோ இணைப்பின் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் அமித் ஷா. சி.ஐ.எஸ்.எஃப் படையைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட மொத்தம் 125 வீரர்கள் ஒரே நேரத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து சைக்ளோத்தானைத் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது. 25 நாள்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சைக்கிள் பேரணி மார்ச் 31 அன்று கன்னியாகுமரியில் முடிவடையும் எனவும் தெரிகிறது.

கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், கடத்தல், ஊடுருவல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் இது ஒரு இயக்கமாக, இந்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி, மார்ச் 6-ம் தேதியான நாளை வியாழக்கிழமை மற்றும் விழா நடைபெறும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களிலும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா. மேலும், பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தக்கோலத்தை உள்ளடக்கிய அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமாகவே உயரடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.