Doctor Vikatan: ஏசி எந்த அளவில் இருப்பது சரியானது… சிலருக்கு அதிகமாக ஏசி தேவைப்படுவதாகச் சொல்கிறார்கள், என்ன உண்மை… ஓயாமல் ஏசி பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் வரும்… குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏசி இருந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்… குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏசி இருக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது, அதன் காரணமாக ஏதாவது பாதிப்புகள் வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

ஏசியை எப்போதும் மிதமான டெம்பரேச்சரில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிகபட்ச குளிரில் வைத்துப் பழக வேண்டாம்.
வெளிப்புறத்தில் வெயில் அதிகமிருப்பதன் காரணமாக ஏற்படும் அதிக வெப்பமும் உட்புறம் ஏசியால் அதிக குளிரும் இருக்கும்போது உடலால் இந்த வேறுபாட்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது சிரமமாக இருக்கும். அதன் காரணமாக, ஆஸ்துமா, மூக்கில் ஒவ்வாமை அல்லது சைனஸ், ஆர்த்ரைட்டிஸ், தசைவலி போன்ற பல பிரச்னைகள் அதிகமாகலாம்.
ஏசியில் இருந்து உடனே வெளியே வெயிலில் செல்லும்போது நீர் வறட்சியால் (dehydration) தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம்.
தவிர, காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், வியர்வை வேகமாக உலராது. இதுவும் அசௌகர்யத்தை அதிகரிக்கிறது. சென்னை போன்ற அதிக வெப்பமான பகுதிகளில் 25-27 அளவில் ஏசியை வைப்பது மிகச் சிறந்தது. அதிக குளிர் உடம்புக்கு சுகம் அளிக்கிறது என்பதற்காக மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

இரண்டுக்கும் சமரசம் செய்யும் விதமாக 23-25 அளவில் ஏசியை வைத்துக்கொள்வது சரியானது
வெப்பம் அதிகமாக இருக்கும்போது, வியர்வை வழியாக உடம்பில் இருந்து நீர் வெளியேறுகிறது. அதிக அளவில் ஏசியை வைக்கும்போது குளிரில், வியர்வை அளவு குறையும்போது, சிறுநீர் வழியாக அதிக நீர் வெளியேறுகிறது. இதனால் உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லை, கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.