தாம்பரம்: 2025- 26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தாக்கல் செய்தார். இதில், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், ஃபுட் ஸ்ட்ரீட், அதிநவீன படிப்பகம் உள்ளிட்ட 71 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று (மார்ச் 6) காலை நடைபெற்றது கூட்டத்திற்கு துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதிக் குழு தலைவர் ரமணி ஆதி மூலம் தாக்கல் செய்தார். மேயர் வசந்தகுமாரி பட்ஜெட் பெற்றுக் கொண்டார். நிதிநிலை அறிக்கையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அடைக்க கால்நடை எல்லை ஒரு கோடி மதிப்பிலும், மாநகராட்சி பள்ளிகளில் தொழில்நுட்ப வகுப்பு, ரோபோடிக் வகுப்புக்குளுக்காக 50 லட்சம், மகளிருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பூங்கா அமைக்க ஒரு கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் அறிவியல் பூங்கா அமைக்க ஐந்து கோடி, தாம்பரம் மாநகராட்சியின் பிரதான மார்க்கெட் பகுதியான சண்முகம் சாலையை ஸ்மார்ட் சாலையாக மாற்ற பத்து கோடி, மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டத்துக்காக 27 கோடி, மாநகராட்சி பகுதியிலுள்ள நீர் நிலைகளில் மாசு போடுவதை தடுத்து புனரமைக்க 10 கோடி, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க மூன்று கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராவது மற்றும் உயர்கல்விக்கு உதவும் வகையில் அதிநவீன படிப்பகம் அமைக்க மூன்று கோடி, மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க ரூ.4 கோடியில் ஃபுட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று 71 முக்கிய அம்சங்கள் பெற்றுள்ளன. கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், வே.கருணாநிதி, ஜெய் பிரதீப் சந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர், மற்றும் 70 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.