உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழை ஆட்சிமொழி ஆக்குவதை எது தடுக்கிறது? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழைப் போலவே மற்றவர் தாய்மொழியையும் மதிக்கிறோம். ரூபாய் நோட்டில் உள்ள தாய்மொழியான தமிழை ஆட்சி மொழியாக்குவதை எது தடுக்கிறது? என்று மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியை கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும். இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1961-ம் ஆண்டு எடுக்கப்பட்டபோது இந்தியாவிலிருந்த தாய்மொழிகளின் எண்ணிக்கை 1,652 என பட்டியலிடப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து 1971-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 109 மொழிகள் மட்டுமே தாய்மொழிகள் பட்டியலில் இடம்பெற்றன. எப்படி இந்த திடீர் மாற்றம்?

இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளும், இவை தவிர, பத்தாயிரம் பேருக்கு மேல் பேசக்கூடிய மொழிகளும் மட்டுமே தாய்மொழி எனக் கணக்கிடப்படவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டதால், தாய்மொழிகளின் பட்டியலில் இருந்த 1,500-க்கும் மேற்பட்ட மொழிகள் தங்கள் தகுதியை இழந்தன என்று மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாய்மொழியாகவே அங்கீகரிக்கப்படாத மொழிகளைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் தங்கள் வாழ்வுரிமைக்கான தேவைகளை எதிர்கொள்வார்கள்? ஆதிக்கம் செலுத்தும் மொழியைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைதான் அவர்களுக்கு ஏற்படும். அடுத்த தலைமுறை தனது தாய்மொழியை இழந்து, ஆதிக்க மொழியே அனைத்தும் என்ற நிலைக்குத் தள்ளப்படும். அதனால்தான் மொழித் திணிப்பை திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

தேன்கூட்டில் கைவைப்பது… தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய மொழித் திணிப்பே புதிய நாடு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் இந்திய எல்லை மீது சீனா படையெடுத்தபோதும், இந்தியா – பாகிஸ்தான் போரின்போதும் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் முன்னோடியாக போர் நிதி திரட்டித் தந்த திமுகவையும், அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கின்றனர், கோட்சேவின் கொள்கையை ஆதரிப்பவர்கள். நாம் தாய்நாட்டை மதிக்கிறோம். தாய்மொழியை உயிரெனக் காக்கின்றோம்.

ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1999-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மொழி அழிந்தால், அந்த இனம் அழிக்கப்படும். அதன் மரபுவழி அறிவுச் செல்வம் மொத்தமாக அழிந்துபோகும்.

அதற்கு மாறாக, அவரவர் தாய்மொழிகளின் மீதான பிற மொழி ஆதிக்கத்தைத் தடுக்கும்போது, மொழி – பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து, உலக மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என்பதுதான் தாய்மொழி நாளின் நோக்கம்.

நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர – சகோதரிகள்தான். இந்தித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வடமாநிலங்களின் சகோதர – சகோதரிகளின் நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் மொழிக் கொள்கை.

இந்தியைத் தவிர மற்ற இந்திய மொழிகளை பாரபட்சமாக அணுகுவது ஏன்? ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்போரிடம், நாங்கள் கேட்கிறோம். ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?

தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், எங்கள் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது. இதை எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக் கொண்டே இருப்போம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.