எமகாதகி விமர்சனம்: நீதி கேட்கும் பெண் பிணம்; சமூக அவலத்தைத் தோலுரிக்கும் அமானுஷ்ய த்ரில்லர்

தஞ்சையிலிருக்கும் ஒரு கிராமத்தின் கோயிலுக்குக் காப்புக் கட்டும் அறிவிப்பைக் கொடுக்கிறார் ஊர்த் தலைவர். அவரின் மகளான லீலாவுக்கு (ரூபா கொடுவாயூர்) சிறுவயதிலிருந்தே மூச்சுத் திணறல் பிரச்னை. ஒரு நாள், அப்பாவுக்கும் மகளுக்கும் வாக்குவாதம் முற்றிவிட, லீலாவை அறைந்துவிடுகிறார் அப்பா. இதனால் கோபத்துடன் தனது அறைக்குள் செல்லும் லீலா, சில நேரம் கழித்துத் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனது தெரிய வருகிறது. இந்நிலையில் இறுதி ஊர்வலத்துக்காகப் பிணத்தை எடுக்க, பிணம் வீட்டை விட்டு நகர மறுக்கிறது. ஊரே திரண்டும் கிடத்திய கட்டிலில் அசைக்க முடியாமல் பிணமாகக் கிடக்கிறாள் லீலா. பிணம் ஏன் நகர மறுக்கிறது, லீலாவின் சாவுக்குக் காரணம் யார் என்பதைப் பேசும் அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் இந்த ‘எமகாதகி’.

எமகாதகி விமர்சனம்

படத்தில் முக்கால்வாசி நேரம் பேசாமல் அசையாமல் இருந்தாலும், மௌனமான அந்தக் கோபச் சிரிப்பினால் நெஞ்சைப் பதற வைக்கிறார் ரூபா கொடுவாயூர். அதிலும் கட்டிலின் மேல் மிதந்து நிற்கும் இடத்தில் அவரது பாவனை சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு அண்ணனாக வரும் சுபாஷ் ராமசாமி, கிடைத்த ஒரு சில உணர்வுபூர்வமான இடங்களிலும் சோபிக்கத் தவறுகிறார். அம்மாவாக கீதா கைலாசம், கதையின் ஆன்மாவைக் காப்பாற்றும் அற்புதமான நடிப்பைக் கொடுத்துப் படத்திற்கு வலுசேர்க்கிறார்.

எமகாதகி விமர்சனம்

காதலனாக நரேந்திரகுமார், அண்ணியாக ஹரிதா ஆகியோரின் நடிப்பில் பெரிதாகக் குறைகளில்லை. இவர்கள் தவிர ஊர்க்கார பெண்களாக வருபவர்களும் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆண் துணைக் கதாபாத்திர நடிகர்களின் நடிப்பில்தான் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது. சாமியார், ஊர்த்தலைவர் உட்படப் பலரின் நடிப்பையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.

கதவைக் காட்டிய இடத்தில் மிரட்ட ஆரம்பிக்கும் இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் பின்னணி இசை, முக்கியமான இடங்களில் கதையோடு ஒன்றச் செய்யும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியதாலோ என்னவோ, அவரின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஒரு சின்னக் கிராமம், அதிலும் வீட்டுக்குள் நடக்கும் கதை என்கிற சுருக்கப்பட்ட வெளியிலும், தேர்ந்த கேமரா கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வைத் தந்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. கதைசொல்லலில் இருக்கும் மர்மத்தை மெல்ல அவிழ்கின்ற யுக்திக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு. ஒரு சாவு வீட்டின் சுற்றுச்சூழலை நம்பகத்தன்மையோடு கொடுத்திருக்கிறது பி.ஜோசப் பாபின் கலை இயக்கம்.  

எமகாதகி விமர்சனம்

படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் ஊரையும் பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்திலிருக்கும் நபர்களையும் விவரிக்கிறது திரைக்கதை. அது சற்றே சுவாரஸ்யமில்லாத இடத்தை எட்டும் நிலையில் வரும் அந்த ‘பகீர்’ காட்சி நம்மை(யும்) நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ‘இதுதான் காரணம்’ என்று நினைக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வைத்து, திரைக்கதையில் மற்றொரு த்ரில்லர் எபிசோடைத் தொடங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். ஒரு பெண் தற்கொலை செய்தால் ஊர் என்ன பேசும் என்கிற எழுத்து, பொறுப்புடன் பெண்ணியம் பேசுகிறது. ‘எமகாதகி என்பது ஒற்றை நபர் அல்ல, சமூகம்தான்’ எனப் பிரசார நெடியில்லாமல் பெண்களையே பேச வைத்த எஸ். ராஜேந்திரனின் வசனங்களுக்கு ஆயிரம் ஹார்ட்டின்கள். குறிப்பாக இறுதிக் காட்சியின் ‘பளார்’ வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன. ஆனால் காதல் காட்சிகள் வாங்க வேண்டிய ரொமான்ஸ் ஹார்ட்டின்கள் மேக்கிங்கிலும், வசனங்களிலும் மிஸ்ஸிங்!

இடைவேளைக்குப் பிறகு காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அது சற்றே அயர்ச்சியடையச் செய்யும் போக்கு! அதேபோல துணைக்கதையாக வரும் திருட்டுச் சம்பவம் திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில் அதை இன்னும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கலாம். காவல்துறையின் விசாரணை முறையும் மிகவும் மேலோட்டமாகவே இருக்கிறது. இது முன்னோக்கிச் செல்லும் திரைக்கதையைச் சற்றே பின்னே இழுக்கும் லாஜிக் மீறல்களாக மாறிவிடுகின்றன. அதேபோல காதலின் பின்னணி சொல்லப்பட்ட விதத்திலேயே இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது. ஆனாலும் க்ளைமாக்ஸ் இதுதான் என்று தெரிந்தும் அது படமாக்கப்பட்ட விதமும், ரூபா, கீதா கைலாசத்தின் நடிப்பும் அட்டகாசமான எமோஷனல் டிராமா!

பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அவளின் பிணமே எழுந்து போராட வேண்டியிருக்கும் என்று சொல்லும் இந்த ‘எமகாதகி’யை முழுமனதுடன் அரவணைத்துக் கொண்டாடலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.