சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுகிறதா? சுதந்திர போராட்டத்தில் உயிர்தியாகம் செய்தவர்களின் நற்பெயரை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் முடியுமா?
கொள்கை ரீதியாக ஒரு திவால் நிலையை காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒன்று ஒரு தேசிய கட்சியோ அல்லது கொள்கை ரீதியான கட்சியோ அல்ல. அது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் கட்சியாக மாறிவிட்டது.
இமாசல பிரதேசத்தை தங்கள் இதயத்தில் வைத்திருப்பதாக கூறியவர்கள், விடுமுறையை கொண்டாடுவதற்காக மட்டுமே இங்கு வந்தார்கள். பேரிடர் காலத்தில் இமாசல பிரதேச மக்களின் கண்ணீரை துடைக்க அவர்கள் வரவில்லை. நானும், அனுராக் தாக்கூரும், ஜெய்ராம் தாக்கூரும் 3 முறை இங்கு வந்து சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினோம்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி வேலைவாய்ப்பின்மை குறித்து மட்டுமே பேசி வருகிறது. அது உண்மைதான், காங்கிரஸ் கட்சி வேலையை இழந்துவிட்டது.
இன்று இந்தியா உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. மேலும் 3-வது இடத்தை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். இதை காங்கிரஸ் கட்சியினரிடம் யார் எடுத்துரைப்பார்கள்.”
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.