வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். அதேபோல, “டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்” என்றும் கூறி வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்த ட்ரம்ப்பின் யோசனையை டென்மார்க் அரசு நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் டென்மார்க் பயணத்தை ரத்து செய்தார். தற்போது மீண்டும் அதிபராகியுள்ள சூழலில் டென்மார்க்கை வாங்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள் மத்தியில் டிரம்ப் இது தொடர்பாக பேசியதாவது:-கிரீன்லாந்தை ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா கைப்பற்றும். கிரீன்லாந்தில் தற்போது வசிப்பவா்களை தங்கள் மக்களாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருக்கிறது ” என்று பேசினார்.
டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது.அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.