கொழும்பு,
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும், தமிழக அரசு நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதி மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
எல்.டி.டி.இ.யுடனான நாட்டின் ஆயுத மோதலின் போது வடக்கு பகுதி இலங்கை மக்களுக்கு இந்தியா பெரிதும் உதவி செய்தது. அவர்கள் பாதுகாப்பு அளித்தனர். அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், மீனவர்கள் பிரச்சினையில் வடக்கின் மக்களுக்கு அவர்கள் உதவத் தவறினால், அது அவர்களின் மற்ற அனைத்து உதவிகளும் உண்மையானவையா என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்களுக்கு உதவுவது என்பது வெறும் வெள்ள நிவாரணத்தை விநியோகிப்பதல்ல. அவர்கள் சுயமாக நிற்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும்” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு செல்ல உள்ளநிலையில், அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலின்போது, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசாங்கம் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.