பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பெங்களூரு லாவல்லி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை ரன்யா ராவ் வசித்து வருகிறார்.
கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதித்துறை டி.ஜி.பி.யான ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளான ரன்யா ராவ் கடந்த 3-ந் தேதி துபாயில் இருந்து, 14 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்தபோது, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது ரன்யா ராவ் துபாயில் தான் தொழில் செய்து வருவதாகவும், அதனால் தான் அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் தன்னை பிடித்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் எந்த விதமான தொழிலையும் துபாயில் செய்யவில்லை என்பதும், தங்கம் கடத்தலில் மட்டுமே ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவின் தந்தை டி.ஜி.பி.யாக இருந்து வருவதால் துபாயில் இருந்து அவர் பெங்களூருவுக்கு வரும் போதெல்லாம், விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரே, அவரை வெளியே அழைத்து வந்துள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரன்யா ராவ், தன்னிடம் அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை என்பதால், துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கத்தை அவ்வப்போது கடத்தி வந்துள்ளார்.
அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஆண்டில் மட்டும் அவர் 40 முறையும், இந்த ஆண்டு இதுவரை 8 முறையும் அவர் துபாய்க்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் சென்று வந்தபோது ஒரே ஆடையை மட்டுமே அணிந்து சென்று வந்துள்ளார்.அதாவது துபாயிலிருந்து பெங்களூருவுக்கு தங்கக்கட்டிகளை கடத்தி வந்து கைதான நடிகை ரன்யா,சோதனையிலிருந்து தப்பிக்க தொடையில் தங்கக்கட்டிகளை ஒட்டிவைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
ரன்யாவிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள்,ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.