“தமிழ் எழுத, படிக்க, பேச தெரியாத நிலை… ஒரு மொழிக் கொள்கையே தேவை” – தவாக தலைவர் வேல்முருகன்

விழுப்புரம்: “தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.

செஞ்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை. ஒரு மொழிக் கொள்கையே உன்னத கொள்கை.

உலகத்தில் எல்லா மக்களும் அவரவர்கள் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள் அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். ஆதலால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ்நாட்டில் தாய் தமிழ் மொழி கல்வியைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேநேரத்தில் உலகை தொடர்பு கொள்ளுகின்ற மொழியாக ஆங்கிலம் இருக்கின்ற காரணத்தினால் ஆங்கிலமும் கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தவித தடையுமில்லை என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து.

ஒவ்வொரு இனமும் தமது தாய் மொழியில்தான் இந்த உலகம் இயங்குகிறது. தாய் மொழியை இழந்த இனம் தம் வரலாற்றை இழந்திருக்கிறது. ஆதலால் நாங்கள் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியை, தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் உள்ளது. கல்விக் கூடங்களில் அது பயிற்சி மொழியாக இருக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வியிலிருந்து ஆராய்ச்சி கல்வி வரையிலும் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால், இங்கு தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்கின்ற நிலை இருக்கிறது.இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாட்டில் மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாநாடு செஞ்சியில் நடைபெறும். இலங்கை முள்ளிவாய்க்காலில் பொது மக்கள் வேறு, விடுதலைப்புலிகள் வேறு என பிரித்து பார்க்காமல் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் செஞ்சியில் மே மாதம் 18-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் மத்திய அரசு நமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி, சுங்கக் கட்டணம் செலுத்த கூடாது, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தி தரக் கூடாது, என்.எல்.சி.-க்கு நிலம் தரக்கூடாது. அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு ஒத்துழைப்பு தரக் கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தின்போது தமிழக அரசுக்கு ஆலோசனை கூறி உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.