“திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை, பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை, பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடங்களில் கொடூரமான முறையில் கத்திக்குத்து என திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதல்வர் சட்டம்-ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழக மகளிருக்கு இழைக்கும் மன்னிக்க முடியாத துரோகம். இது கடும் கண்டனத்துக்குரியது.

சட்டம் – ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.