புதுடெல்லி: மக்களவை தொகுதி மறுவரையறை என்பது வேறு; மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது வேறு என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். புதன்கிழமை அன்று இதனை அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ‘அடுத்த 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு கிடைத்துள்ள தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“மக்களவை தொகுதி மறுவரையறை என்பது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் செயல்முறை. அதுவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதும் வேறு வேறு. அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டிய அவசியமில்லை. தேசத்தின் நலன் கருதி இதை சொல்கிறேன்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ரிசர்வேஷன் என்பது உள்ளது. அதன் மூலம் தீர்வு காண முடியும். தொகுதி மறுவரையறை குறித்து மசோதா எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனால் இப்போது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது” என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். புதன்கிழமை அன்று அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மாநிலம் சார்ந்து பல்வேறு விஷயங்களை அவர் பேசி இருந்தார்.