ஈரோடு மாவட்டம், பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது, இதனை அடுத்து அம்மனுக்கு நாள்தோறும் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் சிறப்பு அலங்காரங்களில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மன் கருவறைக்குச் சென்று நேரடியாக புனிதநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சேறு பூசும் திருவிழா இன்று நடைபெற்றது. முதலில் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சிக்காக கோயிலில் இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லை மாரியம்மன் கோயிலுக்கு குதிரை அழைத்துச் செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்டது, பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன் அம்மன் அழைத்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், வண்ணப்பொடிகளை பூசியபடியும் காய்கறி மாலைகள் அணிந்து கொண்டும் ஊர்வலமாகச் சென்றனர்.

பெண்கள் பழம் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்களுடன் நீண்ட வரிசையில் நின்றிருந்து சாமி தரிசனம் செய்தனர். சேறு பூசி சென்றவர்களின் மீது வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களது வியாபாரம், தொழில் சிறக்க வேண்டி உப்பு, மிளகு, மற்றும் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் காசுகள் உடன் கலந்து சூரை இட்டனர். இத்திருவிழாவில் காளி, சிவன், முருகன் மற்றும் காலகேயர்கள் வேடம் அணிந்து இளைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பவானி மேட்டூர் பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சேறு பூசும் திருவிழா நடைபெற்றதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சேறு பூசும் திருவிழாவில் ஈரோடு, கோவை ,சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில், “சேறு பூசும் பொழுது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய், நொடிகள் வராது. அதேபோல் பொருட்களை சூரை விடுவதால் தொழில், வியாபாரம் பெருகும்” என்றனர்.