லக்னோ,
நம் அனைவரும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ தாமதமாக சென்று ஆசிரியர்களிடம், உயர் அதிகாரிகளிடம் பொய் சொல்லி தப்பிக்கும் பழக்கத்தை வைத்திருப்போம். சிறுவயதில் இருந்தே சரியான நேரத்திற்கு செல்லாமல் எப்போதும் எதற்கும் தாமதமாகவே போகிறவர்கள் இன்னும் இந்த ஊரில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் ஆயுதப்படை காவலராக உள்ள ஒருவர், மேலதிகாரியிடம் அளித்த கடிதத்தில் பணிக்கு தாமதமாக வருவதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம்தான் ஹைலட். அவருடைய வித்தியாசமான விளக்க கடிதம் அந்த உயர் அதிகாரியும் மற்றும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த கடிதமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதம் 44வது பட்டாலியன் பிரதேச ஆயுதப்படை (PAC) தளபதிக்கு எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக கூறி அதற்கு விளக்கம் அளிக்கக் கோரி ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப். 17ஆம் தேதியிட்ட நோட்டீசில் மது சுதன் சர்மா என்ற காவலரின் மீதுதான் தவறான நடத்தை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
குறிப்பாக, முந்தைய நாள் (பிப். 16) காலை 9 மணிக்கு வராமல், என்ன காரணத்தால் தாமதமாக பணிக்கு வந்தீர்கள் என மது சுதன் சர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அந்த காவலர் முறையாக சவரம் செய்யவில்லை என்றும் சீருடையும் முறையாக அணியவில்லை என்றும் அதில் புகார் கூறப்பட்டிருந்தது. மேலும், அவர் தொடர்ந்து தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் பணியிலும் போதிய ஆர்வமின்றி செயல்படுகிறார் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயுதப்படையில் இதுபோன்ற தவறான நடத்தை, ஒழுங்கீனச் செயல்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால் இவை அனைத்திற்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் கோரி அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. தவறினால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மேலதிகாரிக்கு மது சுதன் சர்மா எழுதிய கடிதத்தில் கூறுகையில்,
பிப்.16ஆம் தேதி பணிக்கு தாமதமாக வந்ததற்கு காரணம், சில தனிப்பட்ட காரணத்தால் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் கடுமையான சண்டை ஏற்படுகிறது. மனைவி தன் மேல் அமர்ந்து தனது ரத்தத்தை குடிக்க முயற்சி செய்வதுப்போல் தினமும் கனவு வருவதால் என்னால் தூங்கமுடியவில்லை. அவரால் எனக்கு கொடுங்கனவுகள் வருகின்றன. வாழ்வதில் நம்பிக்கை இழந்துவிட்டேன் ஆன்மிக முக்திக்கு வழிகாட்டுங்கள். இதனாலேயே தாமதமாக பணிக்கு வருவதாகவும் காவலர் விளக்கம் அளித்துள்ளார். இந்த கடிதம் இணையத்தில் கசிந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த கடிதம் உண்மையா, இல்லையா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.