லண்டன்,
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை துவக்கியுள்ளன. இந்த சூழலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி டேவிட் லாமியை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவரது இல்லத்திற்கு வெளியே குவிந்து இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் காரில் ஏறுவதற்காக ஜெய்சங்கர் வெளியே வந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில் ஜெய்சங்கர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.