புதுடெல்லி: “வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஐ.டி அதிகாரிகள் ஆராய்வதற்கான அனுமதியை வழங்கும் புதிய வருமான வரிச் சட்டம், நாட்டு மக்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு சென்றுவிடும்” என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அவர்கள் (மத்திய அரசு) பெகாசஸ் மூலம் நம்மை உளவு பார்த்தார்கள். இப்போது, அவர்கள் நமது தனிப்பட்ட வாழ்க்கையை முழுவதுமாக எடுத்துக்கொள்ள பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் டிஜிட்டல் வாழ்க்கைக்குள் நுழைவதற்கான அதிகாரத்தை வரி அதிகாரிகளுக்கு புதிய வருமான வரிச் சட்டம் வழங்குகிறது. வாரன்ட் இல்லாமல், அறிவிப்பு இல்லாமல் நமது தனியுரிமையைப் பறிக்க வெறும் சந்தேகம் மட்டுமே போதும். இது கண்காணிப்பு. நாம் அனைவரும் இதை சந்தேகத்துக்கு இடமின்றி எதிர்க்க வேண்டும்.
புதிய வருமான வரிச் சட்டமானது, வருமான வரி அதிகாரிகளுக்கு உங்கள் மின்னஞ்சல்களை கட்டுப்பாடற்ற முறையில் அணுக அனுமதி வழங்குகிறது. உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் படிக்கவும், உங்கள் சமூக ஊடகங்கள், உங்கள் பதிவுகள், செய்திகள் மற்றும் தொடர்புகளைக் கண்காணிக்கவும், உங்கள் வங்கிக் கணக்குகள், நீங்கள் சம்பாதிக்கும் மற்றும் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் கண்காணிக்கவும், உங்கள் வர்த்தகக் கணக்குகள், உங்கள் முதலீடுகள் மற்றும் நிதி நகர்வுகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்குகிறது. அதற்கு அவர்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை, வெறும் சந்தேகம் மட்டுமே போதும்.
இதைக் கொண்டு மோடி அரசாங்கம் விமர்சகர்களை மவுனமாக்குவதற்கும், எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கும் துறைகளை தவறாகப் பயன்படுத்துகிறது. குடிமக்களைத் துன்புறுத்தவும், மிரட்டவும், அரசியல் எதிரிகளை குறிவைத்து தீர்த்து கட்டவும், நற்பெயரை கெடுக்கவும் வருமான வரித் துறையை அரசு ஆயுதமாக பயன்படுத்தும். இது கண்காணிப்பு இல்லாமல், வேறென்ன? நீங்கள் இதை ஏற்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா? இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை.
இந்த அரசாங்கம் எந்த அளவுக்கு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அவர்கள் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை ஆயுதங்களாக்கி தங்கள் அரசியல் எதிரிகளை மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கருத்து வேறுபாடு உள்ள எவரையும் நசுக்குகிறார்கள்.
இது நிறுவனங்களை ஆயுதமாக்குவதற்கு வழிவகுக்கும். நற்பெயரை கெடுக்கவும், உயிர்களை படுகொலை செய்வதற்கும் வழிவகுக்கும். நிச்சயமாக நான் இதில் மகிழ்ச்சியடையவில்லை. இது ஒரு கண்காணிப்பு வலையத்தை உருவாக்கும். நீங்கள் உங்களின் தனியுரிமையை மதிக்கும் நபராக இருந்தால், நீங்கள் பேச வேண்டிய நேரம் இது. ஏனென்றால் வரி அதிகாரிகள் இதை ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல, எளிய சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப் போகிறார்கள்,” என்று கூறியுள்ளார்.
ஒரு தெளிவுப் பார்வை: புதிய வருமான வரிச் சட்டம்-2025 அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதில் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதன் முழு விவரம்: வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரமா?