புதுடெல்லி: மகா கும்பமேளாவின் காவல்நிலையத்தில் பதிவான வழக்குகளில் 471 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் பிரயாக்ராஜ் மாநகரக் காவல்நிலையங்களின் விசாரணை இன்று ஒப்படைக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற்றது. 66 கோடி பேர் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிச் சென்றிருந்தனர். இவர்கள் அளிக்கும் புகார்களுக்காக, திரிவேணி சங்கமக் கரையில் மொத்தம் 56 காவல் நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன.
எனினும், 56 காவல்நிலையங்களில் தலைமை காவல்நிலையமாக மேளா காவல்நிலையம் இருந்தது. இதனால், அனைத்து புகார்களும் இந்த மேளா காவல்நிலையத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வளிக்கப்பட்டன. மேலும், மார்ச் 4 வரை, இங்கு 471 வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் ஒரு டஜன் ஐபோன் உள்ளிட்ட 90 சதவீதம் மொபைல் திருட்டு தொடர்பானவை.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று மகா கும்பமேளாவின் டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவிக்கையில், ‘இந்த வழக்குகள் அனைத்தும் பிரயாக்ராஜ் மாநகரக் காவல்நிலையங்களான கித்கஞ்ச், தாராகஞ்ச் மற்றும் ஜுசி ஆகிய காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டன.
இனி அந்த காவல் நிலையங்களின் காவல்துறையினர் விசாரித்து, கைது மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவற்றை திருடிய கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வந்த யாத்ரீகர்களும் உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
வெளிநாட்டினரில், ஜனவரி 13-ம் தேதி சங்கம் காட் பகுதியில் ஓமனில் இருந்து வந்த தீப்தி வபோத்ராவின் பணப்பை திருடப்பட்டது. அவரது மஸ்கட் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையும் அதில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், ஜனவரி 14-ம் தேதி, அமெரிக்காவிலிருந்து வந்த பால் மைக்கேல் புக்கனின் கைபை திருடப்பட்டது. அதில் 1700 அமெரிக்க டாலர்கள், டெபிட்-கிரெடிட் கார்டுகள், லென்ஸ் மற்றும் ஒரு டிஎஸ்எல்ஆர் கேமரா ஆகியவை இருந்தன.
ஜனவரி 29-ம் தேதி, ரஷ்யாவிலிருந்து வந்த குர்சின் நிகோலேவின் பாஸ்போர்ட், உடைகள் மற்றும் பணம் அடங்கிய பை, அரேலி காட் பகுதியில் திருடப்பட்டது. இதுவன்றி சமூக வலைதளங்களில் மகா கும்பமேளா பற்றி அவதூறு, மிரட்டல் செய்திகளை வெளியிட்டவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகின.
இந்த வகையில் மொத்தம் பதிவான 444 வழக்குகளில் ஒன்றின் விசாரணை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மகா கும்பமேளா வருபவர்களில் ஓராயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என மிரட்டல் இருந்தது.
இதன் விசாரணையில் அந்த பதிவை இட்டதாக பிஹாரின் பூர்ணியா மாவட்டத்தின் பவானிபூரை சேர்ந்த ஆயுஷ் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது நண்பரின் தூண்டுதலின் பேரில் இந்த குற்றத்தைச் செய்ததகாக ஒப்புக் கொண்டுள்ளார்.