புதுடெல்லி: மகா கும்பமேளாவில் படகுகளை ஓட்டி ரூ.30 கோடி சம்பாதித்ததாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் பாராட்டப்பட்டவர் பிண்ட்டு மெஹ்ரா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவின்போது தனது குடும்பத்தினருடன் 130 படகுகளை இயக்கி 30 கோடி ரூபாய் சம்பாதித்தவர் பிண்ட்டு மெஹ்ரா. பிரயாக்ராஜின் அரேலைச் சேர்ந்த இவர் மீது நைனி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவாகி உள்ளன. அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் தந்தை மீதும் கூட பிரயாக்ராஜின் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. படகோட்டியான பிண்ட்டு, அரேலில் வசிக்கும் பச்சா மெஹ்ராவின் மூன்றாவது மகன் ஆவார்.
பிண்ட்டுவின் தந்தையான பச்சா மெஹ்ரா என்கிற ராம்சஹரே மெஹ்ரா மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் கைதாகி சிறையில் இருந்தபோது உடல்நலம் குன்றி சிகிச்சையின்போது, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் ன் 25-ல் உயிரிழந்தார். பச்சா மெஹ்ராவின் மனைவி சுக்லா தேவிக்கு மகா கும்பமேளாவில் பல கோடி மதிப்பிலான டெண்டர்கள் கிடைத்துள்ளன. இதற்குமுன் சுக்லா தேவி, பிரயாக்ராஜை சுற்றியிள்ள பகுதிகளில் ஆற்று மணல் எடுக்க அனுமதி பெற்றிருந்தார்.
பிண்ட்டுவின் மூத்த சகோதரர் ஆனந்த் மெஹ்ராவும் குற்றப் பின்னணி கொண்டவர்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு யமுனை நதியில், படகில் இருவர் கொலை செய்யப்பட்டதில், ஆனந்த் மெஹ்ராவும் கொலை செய்யப்பட்டார். பிண்ட்டுவை விட அவரது மூத்த சகோதரர் அர்விந்த் மெஹ்ரா மீது, நைனி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. பிண்ட்டு மீது 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கொலை, கொலை முயற்சி, கலவரம், குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2009-ல் நைனியின் லோக்பூரில் நடந்த பரபரப்பான இரட்டைக் கொலை வழக்கிலும் பிண்ட்டு முக்கிய அக்யூஸ்டு ஆவார். இந்த வழக்கில், பிண்ட்டுவுடன் அவரது மற்றொரு சகோதரர் அர்விந்த் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைதாகி சிறை சென்றனர்.
மகா கும்பமேளாவில் படகோட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பிண்ட்டு மெஹ்ரா உட்பட 8 பேர் மீது பிப்ரவரி 11-ல், கும்பமேளா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகின.
மகா கும்பமேளாவில் படகை இயக்க விரும்பினால், அனைவரும் தலா ரூ.50,000 தினமும் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாகப் பிண்ட்டு மீது புகார் அளிக்கப்பட்டது. பணம் தர மறுப்பவர்கள், கொலை செய்யப்பட்டு, தூக்கி எறியப்படுவார்கள் என படகோட்டிகளை மிரட்டியதாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், உ.பி. முதல்வர் பிண்ட்டு மெஹரா குடும்பத்தினரை பாராட்டி உ.பி. சட்டப்பேரவையில் பேசியது சர்ச்சையாகி உள்ளது. அதேசமயம், பிண்ட்டு மெஹ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்குகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.