“யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?” – அதிமுக நிர்வாகியை தாக்கிய ராஜேந்திர பாலாஜி: பின்னணி என்ன?

அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர், கட்சி நிர்வாகிகள் பலரும் மேடையில் அமர்ந்திருந்த ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (52) பொன்னாடை அணிவிக்க வந்தார். ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு, அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்கச் சென்றார். அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, “யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?’ எனக் கேட்டவாறு நந்தகுமார் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி, அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இச்சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து கேட்பதற்காக ராஜேந்திர பாலாஜியை தொடர்புகொண்டபோது, அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.