வருணை சமாளிக்க நியூசிலாந்து கையில் எடுக்கும் புது ஆயுதம் – என்ன தெரியுமா?

IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அதன் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

IND vs NZ Final: 25 ஆண்டுகளுக்கு பின்னர்…

கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை, ஸ்டீபன் பிளமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசியாக நியூசிலாந்து ஆடவர் சீனியர் அணி அடித்த ஐசிசி கோப்பையும் (ஓடிஐ) அதுதான். 2021இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து பெற்றிருக்கிறது.

IND vs NZ Final: தொடர்ந்து 3வது முறையாக பைனலில் இந்திய அணி

அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறுதிப்போட்டியில் வீழ்த்திய இந்திய அணியே நியூசிலாந்துக்கு மீண்டும் சிக்கியிருக்கிறது. மறுபுறம் இந்திய அணி நியூசிலாந்தை குரூப் சுற்று போட்டியில் வீழ்த்தியது போல், இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 2013, 2017, 2025 என தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

IND vs NZ Final: இந்திய அணியின் முக்கிய வீர்ர வருண் சக்ரவர்த்தி

இந்திய அணி நியூசிலாந்தை கடந்த போட்டியில் வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வருண் சக்ரவர்த்தி. மிடில் ஓவர்களில் நியூசிலாந்து பேட்டிங்கை நிலைகுலைய செய்து விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தார். அவர் 2 போட்டிகளில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இந்த போட்டியிலும் 3 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

IND vs NZ Final: வருண் இதை செய்யணும்!

கடந்த முறை அவரிடம் வில் யங், கிளென் பிலிப்ஸ், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சாட்னர், மேட் ஹென்றி என 5 பேரின் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதில் டாப் ஆர்டர் பேட்டர் வில் யங் மட்டுமே உள்ளார். மற்ற அனைவரும் பின்வரிசை பேட்டர்கள். அப்படியிருக்க நியூசிலாந்து இறுதிப்போட்டியில் கட்டுப்படுத்த வருண் சக்ரவர்த்தி தொடக்கக் கட்ட ஓவர்களிலேயே சில முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியாக வேண்டும்.

IND vs NZ Final: வருண் சக்ரவர்த்தியை சமாளிக்க…

வருண் சக்ரவர்த்தியை கேன் வில்லியம்சன் விளையாடுகிறார், வில்லியம்சனிடம் எவ்வித தடுமாற்றமும் தெரியவில்லை எனலாம். ரச்சின் ரவீந்திரா உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். டாப் ஆர்டர் செட்டாகிவிட்டால் யாராலும் அசைக்க முடியாது என்பதால் நியூசிலாந்து அணி வில் யங்கிற்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சமாளிக்க இடது கை பேட்டரா டெவான் கான்வேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கான்வே – ரச்சின் – வில்லியம்சன் ஆகியோர் 30 ஓவர்கள் வரை நின்று ஆட்டத்தை தங்கள் வசம் வைத்திருக்கக் கூடியவர்கள் என்பதாலும் சுழற்பந்துவீச்சை இவர்கள் மூவரும் சிறப்பாக கையாள்வார்கள் என்பதாலும் இவர்களே டாப் ஆர்டர் பேட்டராக இருப்பார்கள் எனலாம். டேரில் மிட்செல், டாம் லதாம் ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடுபவர்கள் என்பதால் அவர்களை தடுக்க இந்திய அணி கடந்த போட்டியில் பல வியூகங்களை அமைத்திருந்தது. இறுதிப்போட்டியிலும் இந்திய அணி அதை செய்யும் எனலாம். வருண் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுக்கவில்லை என்றால் பின்பகுதியில் அவர் மேல் அழுத்தம் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.

IND vs NZ Final: பிளேயிங் லெவன் மாற்றம்

எனவே, நியூசிலாந்து அணி வருணை கட்டுப்படுத்த டெவான் கான்வேயை அணிக்குள் சேர்க்கும் எனலாம். இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.