வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம். 37 வயதான இவர் அந்த அணியின் விக்கெட் கீப்பரும் முக்கிய பேட்ஸ்மேனும் ஆவார். இந்த நிலையில், அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததால், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் நேர்மையாக விளையாடினேன்
இது குறித்து முஷ்பிகுர் ரஹீம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன் . இறைவனுக்கு நன்றி. சர்வதேச அளவில் எங்களது சாதனைகள் குறிப்பிடும் அளவு இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
மேலும் படிங்க: ind vs nz: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி.. அம்பத்தி ராயுடு கணிப்பு
நான் எப்போதெல்லாம் நாட்டுக்காக ஆடினேனோ அப்போதெல்லாம் 100 சதவீத அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் இருந்தேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. அப்போது இதுதான் எனது முடிவு என்பதை உணர்ந்தேன். மேலும் எனது நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து டெஸ்ட் & டி20 போட்டிகளில் விளையாடுவார்
முஷ்பிகுர் ரஹீம் இதுவரை 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் 9 சதங்கள் மற்றும் 49 அரைசதங்கள் உட்பட 7,792 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 36.92ஆக உள்ளது. அதேபோல் 102 டி20 போட்டிகளில் அவர் விளையாடி இருக்கிறார். அதில் 6 அரை சதங்களை விளையாசிய அவர் 1500 ரன்களை அடித்துள்ளார். 92 டெஸ்ட் போட்டிகளில் 5961 ரன்கள் குவித்துள்ளார். அதில் 11 சதங்கள் மற்றும் 27 அரை சதங்கள் அடங்கும்.
அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஓய்வை அறிவித்து இருக்கிறார். எனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். மேலும், அவர் இன்னும் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா அணி.. இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து!