தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, 2025 அகாடெமி அவார்ட்ஸில் அனோரா திரைப்படத்துக்காக விருதுபெற்ற சீன் பேக்கரை வாழ்த்தியுள்ளார். பாலியல் தொழிலாளியின் காதல் குறித்த காமெடி டிராமா படமான அனோரா, 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது.

இந்த படத்தின் மூலம், ஒரே படத்துக்காக 4 ஆஸ்கர் விருதுகள் வாங்கிய ஒரே நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சீன் பேக்கர்.
சீன் பேக்கரை வாழ்த்திய ராஜ மௌலி, “அனைத்து ஆஸ்கர் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்!
ஒரே இரவில் 4 ஆஸ்கர்களை வென்ற ஒரே ஃபிலிம் மேக்கராக வரலாறு படைத்திருக்கும் சீன் பேக்கருக்கு மிகப் பெரிய பாராட்டுகள்!
ஆஸ்கர் விருது விழாவில் சினிமாக்களை காப்பாற்றுவது பற்றிய உரை உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டியது. சினிமா வரும் ஆண்டுகளில் செழித்து வளர வேண்டும்!” என ட்வீட் செய்துள்ளார்.
அனோரா திரைப்படம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சீன் பேக்கர் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் படத்தொகுப்பாளர்.
சீன் பேக்கரின் Oscar உரை:
“நாம் அனைவரும் இன்று இங்கிருக்க, இந்த ஒளிபரப்பைக் காண காண காரணம், நாம் திரைப்படங்களை நேசிக்கிறோம். நாம் எங்கே திரைப்படங்களைக் காதலிக்கத் தொடங்கினோம்? திரையரங்குகளில். ரசிகர்களுடன் இணைந்து திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம். நாம் ஒன்றாக சிரிக்கவும், அழவும் செய்கிறோம். உலகமே பிளவுபட்டுள்ளதாகத் தோன்றும் இந்த காலத்தில் இது எப்போதையும் விட மிகவும் அவசியமானது. நீங்கள் வீட்டில் பெற முடியாத கூட்டு அனுபவம். இப்போது, திரையரங்குக்கு செல்லும் அனுபவம் ஆபத்தில் உள்ளது.

திரையரங்குகள், குறிப்பாக சுதந்திரமான உரிமையாளர்களால் நடத்தப்படும் திரையரங்குகள் மிகவும் சிரமப்படுகின்றன. பெருந்தோற்று காலத்தில் நாம் அமெரிக்காவில் 1000 ஸ்கிரீன்களை இழந்தோம். தொடர்ந்து இழந்து வருகிறோம். இந்த போக்கை நாம் நேர் எதிராக மாற்றாவிட்டால், நம் கலாசாரத்தின் முக்கிய பகுதியை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். இது என்னுடைய போர்க்குரல்” என்று பேசினார்.
மேலும் அவர், “நான் பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் அவர்களது கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். சில ஆண்டுகளாக அவர்களது வாழ்க்கை அனுபவங்களை என்னிடம் கூறினர். அவர்களுக்கு மரியாதையுடன் நன்றி கூறி, இந்த விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.” என்றும் பேசியுள்ளார்.

சீன் பேக்கருடன் அனோர (Anora) படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து முதன்மை கதாப்பாத்திரத்துக்கான சிறந்த நடிகை விருதை வென்ற மிக்கி மேடிசனும் பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.