வாஷிங்டன்: மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் நடவடிக்கையை ஏப்ரல் 2 வரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து கனடாவும் அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் முடிவை நிறுத்திவைத்துள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்க ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களின் தலையீடு ஆகியன இருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு பரஸ்பர வரி குறித்து அவர் அறிவித்தார்.
அண்மையில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றியபோதும் ட்ரம்ப் பரஸ்பர வரி குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும்.
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை அமல்படுத்த நினைக்கிறேன்.” என்றார்.
ஏப்ரல் 2 வரை நிறுத்திவைப்பு: முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கும் கோப்புகளில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கும், பண வீக்கம் தாறுமாறாக உயரும் என ட்ரம்ப்பின் முடிவின் மீது அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ட்ரம்ப் வரி விதிப்பை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், “அமெரிக்கா – மெக்சிகோ – கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.” என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
முக்கிய சந்திப்பால் மாற்றம்! இந்த ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டின் ஆட்டோமொபைல் நிறுவன ஜாம்பவான்களான ஸ்டெலாண்டிஸ், ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி விதிப்பு அமலுக்கு வருவது ஒரு மாத காலம் தள்ளிவைக்கப்பட்டாலுமே கூட கனடாவில் இருந்து இறக்குமதியாகும் 62 சதவீத பொருட்கள் புதிய வரி விதிப்பை சந்தித்தே ஆகும் என்று வெள்ளி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.
ட்ரம்ப்பின் வரி விதிப்பு ஒத்திவைப்பு முடிவானது அமெரிக்க கார் உற்பத்தியாளர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு ஒத்திவைப்பை அறிவித்தவுடன் கனடா நிதியமைச்சர் டொமினி லேப்ளான்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஏப்ரல் 2 வரை அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை நிறுத்திவைக்கிறோம். இரண்டாம் அலை வரி விதிப்பை நிறுத்துவதோடு, முந்தைய வரிகளை விலக்குவது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘பொருளாதார நிலை அறிந்த செயல்பாடு..’ ட்ரம்ப்பின் உத்தரவு குறித்து கேட்டோ பொருளாதார ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் ஸ்காட் லின்ஸிகோம், “பொருளாதார நிலவரத்தின் உண்மை நிலையறிந்து ட்ரம்ப் செயல்பட்டுள்ளார். வரி விதிப்பு விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என்பதை உணர்ந்துள்ளார். பங்குச்சந்தைகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு உகந்ததாக இல்லை.” என்றார்.
ஜனவரியில் அதிபரானதிலிருந்தே அதிபர் ட்ரம்ப் பல்வேறு வரி விதிப்புகளை அறிவித்து உலகளாவிய வரிப் போரை முன்னெடுக்க முயற்சித்து வருகிறார் என்ற விமர்சனம் இருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.